Header Ads

 • சற்று முன்

  ஹாலிவுட்டில் கலக்கும் 18 வயது தமிழ் பெண்.

  பிரபல ஹாலிவுட் நடிகையும் எழுத்தாளருமான மின்டி காலிங் இயக்கத்தில், நெட்ஃபிலிக்ஸில் ஒளிபரப்பாகும் தொடர் 'நெவர் ஹேவ் ஐ எவர்' (Never Have I Ever ). டிஜிட்டல் உலகில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கும் இந்தத் தொடரின் வெற்றியை ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமல்லாமல், உலக தமிழர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். காரணம் அந்தத் தொடரில் நடிக்கும் 18 வயதேயான தமிழ்பெண் மைத்ரேயி ராமகிருஷ்ணன். 

  அவரது நடிப்பால் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். இராமகிருஷ்ணனின் பெற்றோர் ஈழத்திலிருந்து கனடாவிற்கு புலம் பெயர்ந்தவர்கள். கனடாவில் பள்ளியில் படிக்கும்போதே, நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார் மைத்ரேயி. பொதுவாக ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்றால் முறையான நடிப்பு பயிற்சி பெற்றவர்களே உள்ளே நுழைய முடியும். ஆனால் எந்த ஒரு பயிற்சி பெறாத மைத்ரேயி பல சோதனைகளை கடந்து இந்த தொடரில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். 

  நெவர் ஹேவ் ஐ எவர் தொடருக்கான தேர்வு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதற்காக சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்திருந்தனர். மைத்ரேயியும் விளையாட்டாகத்தான் இதற்கு விண்ணப்பித்து இருக்கிறார். முதலில் கதையின் ஒரு பிரதியை அனுப்பி ஒரு பாத்திரத்தை தேர்வுசெய்து நடித்து வீடியோவா அனுப்பச் சொல்லி இருக்கிறார்கள். அதையும் விளையாட்டாகவே செய்திருக்கிறார் அவர். அடுத்தகட்ட சோதனையில் மற்றொரு பிரதி... அப்படி அடுத்தடுத்து ஆறு பிரதிகளுக்கு நடித்துக் வீடியோக்களை அனுப்பி இருக்கிறார் மைத்ரேயி. ஒவ்வொரு முறையும் வீடியோக்களை அனுப்பிய பிறகும், எந்த ஆசையும் எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் இருந்திருக்கிறார். ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் சுமார் 2000 பேர் நீக்கப்பட்டு, மீதம் உள்ளவர்களே அடுத்தடுத்த கட்டங்களுக்கு தேர்வானது பிறகுதான் இவருக்கு தெரிய வந்ததாம்...

   
  எல்லாம் முடிந்து நேரடி தேர்விற்கு அழைப்பு வந்த போதும், அவர்கள் செலவில் அமெரிக்கா சென்று வந்தது தான் லாபம் என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் அழைப்பு வந்திருக்கிறது நடிக்க தேர்வாகி விட்டார் என்பது அதனை அவரால் நம்பவே முடியவில்லையாம். தேர்வானதோடு இல்லாமல், தற்போது தனது நடிப்பினால் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்துவருகிறார். 

  இந்த தொடரில் நடித்தது பற்றிய சுவாரஸ்யமான நிகழ்வுகளை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பகிர்ந்திருக்கிறார். அதில், படப்பிடிப்புத் தளத்தில் ஒரு பள்ளி வகுப்பறையில் இருப்பது போல தான் உணர்தேன். முந்தையநாளே அடுத்து நாளுக்கான காட்சி வசனங்களை கொடுத்துவிடுவார்கள். இரவெல்லாம் வசனங்களை மனப்பாடம் செய்து, அதற்கு தயாராக வந்துவிடுவேன். கேமரா முன் நிற்கும்போது எனக்கு எந்த தயக்கமும் இல்லை.” என தெரிவித்திருக்கிறார். மேலும், “தான் ஒரு கனடிய தமிழ்ப் பெண் எனவும், ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்காக என் பெயரை மாற்ற மாட்டேன் எனவும், ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் மகள் என்ற அடையாளாத்தை இழக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார் மைத்ரேயி. அதோடு நான் தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ் உன்னதமான மொழி என்றும் கூறும் அவர், தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் நான் ஏதாவது செய்ய வேண்டும். நான் வாழும் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதில் நான் பெருமைப்படுகிறேன். என்னாலான எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன்.." என்கிறார். 

  ஒரே தொடரின் மூலம், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, இந்தியா, இலங்கை என பல்வேறு நாடுகளிலும் மைத்ரேயி ராமகிருஷ்ணனைப் பின்தொடரும் ரசிகர்களாக லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறார்கள். இப்படி உலகளாவிய ரசிகர்களைக் கவர்ந்தாலும் தான் ஒரு தமிழ் பெண் என்பதில் பெருமை கொள்கிறேன் என்கிறார் மைத்ரேயி.

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad