கொரோனா எப்போது ஒழியும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும். முதல்வர்
கொரோனா எப்போது ஒழியும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரி பகுதியில் தனியார் கல்லூரில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது பொது மக்கள் வெளியில் செல்வதை குறைத்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
''கொரோனா ஒரு புதிய நோய். வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாலேயே கொரோனா பரவியது. தமிழகத்தில் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதால் அதிக எண்ணிக்கையில் மக்கள் குணமடைந்து வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரை 30,230 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை தடுக்கவே முழு பொதுமுடக்கம் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களை சிரமப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. பொது மக்கள் உதவி இருந்தால்தான் நோய் பரவலை குறைக்க முடியும்,'' என்றார்.
தடுப்பு மருந்து இன்னும் கண்டறியாத நேரத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் மருத்துவர்கள் அதிக கவனத்தோடு செயல்படுகிறார்கள் என்றார். ''தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. 45 அரசு பரிசோதனை மையங்களும், 38 தனியார் மையங்களும் செயல்படுகின்றன,'' என்றார்.
இதுவரை, எட்டு லடசத்திற்கு மேற்பட்ட கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட முதல்வர், இந்தியாவில் அதிக சோதனைகளை செய்த மாநிலம் தமிழகம்தான் என்றார்.
சென்னையில் 17,500 நபர்கள் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார் முதல்வர் பழனிசாமி. ''சென்னையில் இருந்து வெளியேறி பிற மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்தால், உடனடியாக சிகிச்சை தரப்படுகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம். இதுமட்டும்தான் நமக்கு உள்ள ஒரே வழி. மற்றபடி இந்த நோய் எப்போது நீங்கும் என்பது இறைவனுக்குதான் தெரியும்,'' என்றார்.
மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "அமைச்சரே மறுத்துள்ளார் என்பதால் பிறர் கூறும் தகவலை நம்பவேண்டாம்" என்றார்.
No comments