Header Ads

  • சற்று முன்

    ஆவடி அரசு மருத்துவமனையின் அவலநிலை.. மருத்துவர்கள் பற்றாக்குறையினால் மக்கள் அவதி...


    ஆவடி அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் காய்ச்சல், தலைவலிக்கு வரும் நோயாளிகளுக்குக் கூட சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பப்படும் அவலநிலை நீடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்ட சுகாதார இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில்,  இயங்கிவருகிறது ஆவடி அரசு மருத்துவமனை. தினசரி சுமார் 1000 வெளிநோயாளிகளும், நூற்றுக்கும் அதிகமான உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். திருமுல்லைவாயில், பருத்திப்பட்டு, பட்டாபிராம்,  வெள்ளானுார், மோரை, பாலவேடு, அரக்கம்பாக்கம், கரலப்பாக்கம், திருநின்றவூர் உள்ளிட்ட  50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர்.


    இந்த மருத்துவமனையில் ரூ.2.75 கோடி செலவில், புதிய கட்டடம்  கட்டப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு கண், எலும்பு, காது, மூக்கு, காச நோய், சித்த மருத்துவம்  உள்ளிட்ட 26 தனி பிரிவுகள் தொடங்கப்பட்டன.  ஆனால், பத்து ஆண்டுகளாகியும் காய்ச்சல், இருமல், வயிற்றுவலி, பிரசவம்  போன்றவற்றிற்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவசர சிகிச்சை பிரிவு கூட செயல்படுவதாக தெரியவில்லை.

    இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாவது: ”ஐந்து மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். பிரசவம் உள்ளிட்ட சில அவசர சிகிச்சைகளுக்கு, மற்ற அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், சுழற்சி முறையாக  ஆவடி மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால், நோயாளிகள் , பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் இங்கு மயக்கவியல் மருத்துவர் இல்லாததால் அறுவை சிகிச்சை எதுவும் நடைபெறுவது கிடையாது.”


    ”சமையல்காரர் பணியிடம் காலியாக இருந்து வருவதால் உள்நோயாளிகளுக்கு உணவுகள் வழங்கப்படுவதில்லை. சமையல் அறை, இரும்பு பொருட்களின் குடோனாக மாறிவிட்டது. மருத்துவமனையில் பணிபுரிந்த சித்த மருத்துவர், அண்ணாநகருக்கு மாற்றப்பட்டுவிட்டார்.இதனால்  சித்த மருத்துவ பிரிவும் பூட்டிக் கிடக்கிறது.”

    ”விபத்து சிகிச்சை பிரிவும் செயல்படவில்லை. இதனால், திருவள்ளூரில் இருந்து அம்பத்துார் வரை, விபத்துகளில் சிக்குவோரை, கீழ்ப்பாக்கம் அல்லது ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு தான் அனுப்பும் அவல நிலை உள்ளது” என்று தெரிவித்தனர்.

    இந்நிலையில் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட 32 கோடி ரூபாய் எங்கே? என
    தி. மு. க. மாவட்ட செயலாளர் சா. மு. நாசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இன்று, ஆவடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவையான முகக்கவசம், கையுறை, கொரோனா தடுப்பு உடை மற்றும் கிருமினாசினி ஆகியவற்றை வழங்கினார்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாசர், ”புதிய மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்காக  32 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனக் குற்றம் சாட்டினார்.  அப்போது மதிமுக மாவட்ட துணை செயலாளர் அந்திரிதாஸ், திமுக நகர செயலாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யுவராஜ் ஆகியோர் உடனிருந்தனர். 



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad