சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை-முதல்வர்
சென்னையில் முழு ஊரடங்கு கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுப் பின்னர் முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். மேலும் மேட்டூர் அணையில் 300 நாட்களுக்கு மேலாக 100 அடியாக நீர்மட்டம் நீடித்து வருவதாகவும்,
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தொடர்ந்து 90 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என்றம் முதல்வர் தெரிவித்தார்.
அதற்கு தேவையான 125 டிஎம்சி தண்ணீரை 100 டிஎம்சி மேட்டூர் அணையிலிருந்தும், மீதமுள்ள 25 டிஎம்சி தண்ணீர் மழை நீர் மற்றும் நிலத்தடி நீர் மூலம் பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதன் மூலம் 5.22 லட்சம் ஏக்கர்நிலம் பாசன வசதி பெறும் என்றும் இதில் 3.25 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த முதல்வர், எட்டு வழி சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றும் இதில் மாநில அரசின் பங்கு எதுவும் இல்லை என்றும் கூறிய முதல்வர், மத்திய அரசுக்கு இந்த திட்டத்தை நிறைவேற்ற உதவிகள் தான் செய்துவருவதாகவும் கூறினார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்த முதல்வர், இதில் என் புகைபடத்துடன் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பியவர் மீது தகந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
No comments