Header Ads

  • சற்று முன்

    தனியார் மருத்துவமனைகளின் சுரண்டல் தடுக்கப்பட வேண்டும்





    தனியார் மருத்துவமனைகளின் சுரண்டலை தடுக்க வேண்டும். 

    கொரோனா நோயிலிருந்து மக்களை காப்பாற்ற உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்களின் சேவைகளுக்கும், தியாகங்களுக்கும் தலைவணங்க வேண்டும். அதேவேளையில் தனியார் மருத்துவமனையில் நடைபெறும் சிகிச்சை முறைகளையும், கொள்ளைகளையும் அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பதுதான் வேதனை அளிக்கிறது. மருத்துவ காப்பீட்டை நம்பி தனியார் மருத்துவமனைக்கு செல்லும் கொரோனா நோயாளிகளிடம் மனச்சாட்சி இல்லாமல் பில் போடுவதாகவும், காப்பீட்டு நிறுவனம் அந்த பணத்தை தர மறுப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ஆவடி அருகே பட்டாபிராமை சேர்ந்த கொரோனா நோயாளி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். அவருக்கு சரியான உணவு கூட வழங்காமல் மிக மோசமான முறையில் பராமரிக்கப்பட்டுள்ளார்.  ஆனால் அவருக்கான பில் பல லட்சங்கள் என்று கூறப்படுகிறது. அந்த தொகையை காப்பீட்டு நிறுவனம் தர மறுத்து பாதியாக குறைத்திருக்கிறது. மீதி பாதி பணத்தை நோயாளியை கட்டச்சொல்லி நிர்பந்தம் செய்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் மீதி பணத்தை கட்ட முடியாமல் தவித்து இருக்கிறார். அதேபோல் காப்பீடு அட்டையை வைத்திருப்பவர்களுக்கு ஒரு விதமான சிகிச்சை முறைகளையும் கையில் பணத்தை வைத்திருக்கும் நோயாளிகளுக்கு வேறு விதமான சிகிச்சை முறைகளும் பராமரிப்பதும் தனியார் மருத்துவமனைகளின் கொள்கையாக இருந்து வருகிறது. இதுபோன்ற மோசமான மருத்துவமனைகளை கண்டிக்காமல் அரசு வேடிக்கை பார்த்து வருவதுதான் வேதனை அளிக்கிறது. சென்னை புறநகரில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இறந்து விட்டார். அவருடைய உடலை அம்பத்தூர் இடுகாட்டு வாசலில் இறக்கி வைத்துவிட்டு அலட்சியமாக சென்ற சம்பவம் மனித நேயம் உள்ள அனைவரையும் கலங்க வைத்தது. அதன்  பின்னர் காவல்துறை தலையிட்டு அந்த உடலை வளசரவாக்கம் மயானத்தில் எரிக்கப்பட்டது. இதுவரை அந்த மருத்துவமனையை  ஒரு பேச்சு அளவிற்கு கூட அரசு கண்டித்ததாக தகவல்கள் இல்லை. இவை அனைத்தையும் விட நோயாளிகளிடம் பணம் இருக்கும் வரை சிகிச்சை அளித்துவிட்டு அவர்களிடம் பணம் இல்லை என்று தெரிந்ததும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்ற கொடுமையும், ஒரு நோயாளி இனிமேல் பிழைக்க மாட்டார் என்று தெரிந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுகின்ற மன்னிக்க முடியாத கொடுமையும் தனியார் மருத்துவமனைகள் அரங்கேற்றி வருகின்றன. 
    கொரோனா நோயிக்கு உலகம் இன்னும் மருந்தே கண்டுபிடிக்க வில்லை என்கிறது. கண்ணிற்கு புலப்படாத நோய்க்கு மருந்து இல்லாத வைத்தியத்திற்கு லட்சக்கணக்கில் கட்டணம் என்பது எவ்வளவு பெரிய மோசடியோ, அதில் சிறிதும் குறைவில்லாதது அதனை அரசு வேடிக்கை பார்ப்பது.

    1 comment:

    Post Top Ad

    Post Bottom Ad