Header Ads

 • சற்று முன்

  சட்டமன்ற தேர்தல் :ரஜினி வாய்ஸ், எடப்பாடியார் முதல்வர் வேட்பாளர். பா. ஜ. க. வியூகம்?


  சட்டமன்ற தேர்தல்: ரஜினி வாய்ஸ், எடப்பாடியார் முதல்வர் வேட்பாளர், பா. ஜ. க. துணை முதல்வர் ?

  நடிகர் ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சியை தொடங்குவார் என்று அவருடைய ரசிகர்களும், அரசியல் ஆர்வாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். ரஜினியின் தீவிர ரசிகராக மாறியுள்ள தமிழருவி மணியன், வலதுசாரி சிந்தனையாளர் ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற முக்கிய பிரமுகர்களும் ரஜினி விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என்று கூறி வந்தனர். கொரோன வைரஸ் பரவி வரும் இந்த கால சூழ்நிலையில் அவர்களின் ஆசை நிறைவேற வாய்ப்பே இல்லை என்றே சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். 

   அ. தி. மு.க. கூட்டணியில் பா. ம. க., தே. மு. தி. க., பா. ஜ. க. போன்ற கட்சிகள் இருந்தாலும் அது வெற்றி பெறும் கூட்டணியாக அமையவில்லை என்பது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நிருபனமாகிவிட்டது. அப்பொழுது தி. மு. க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. அதனால் தி. மு. க. விற்கு எதிராக, குறிப்பாக மு. க. ஸ்டாலினுக்கு எதிராக வலுவான தலைமையை உருவாக்க வலதுசாரி சிந்தனையாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களின் தீவிர முயற்சியினால் கண்டுபிடிக்கப் பட்டவர்தான் நடிகர் ரஜினிகாந்த்.

   அரசியலில் ஈடுபடவும் புதிய கட்சி தொடங்குவதற்கும் உண்மையில் ரஜினிக்கு ஆர்வம் இருக்கிறதா? இல்லையா என்ற பெரும் சந்தேகம் மக்களிடையே இருக்கிறது. நடிகர் ரஜினி ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர். ஒரு சிறந்த ஆன்மீகவாதி அரசியலுக்கு வரமாட்டார். ரஜினியும் வரமாட்டார் என்பதே பெரும்பாலனவர்களின் கருத்து. ஆனால் பா. ஜ. க. போன்ற கட்சிக்கு தி. மு. க. வை எதிர்த்து அரசியல் செய்வதற்கு வலுவான தலைமை தேவை படுகிறது. அந்த இடத்தை நடிகர் ரஜினியை வைத்து நிரப்பிவிடலாம் என்று பா. ஜ. க.வினர் கருதுகிறார்கள். அதனால் அவர்களே ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அடிக்கடி ஆருடம் கூறி வந்தார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதும் அவர்களின் திட்டம் நிறைவேற வாய்ப்பில்லை என்று அரசியல் விமர்சகர் அருள்மணி தெரிவிக்கின்றார். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தற்போது உள்ள
   அ. தி. மு. க. தலைமையிலான கூட்டணியை எப்படியாவது வெற்றி கூட்டணியாக மாற்றியே தீர வேண்டும் என்று பா. ஜ. க. விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

  இது குறித்து பா. ஜ. க.வின் ஆதரவு நிலைபாட்டில் உள்ள பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசும்போது, தமிழகத்தில் அ. தி. மு. க. ஆட்சியில் இருந்தாலும் அந்த கட்சியின் கொள்கை திட்டங்கள் எதையும் செயல்படுத்த மத்திய பா. ஜ. க. அரசு விடவில்லை. அது எட்டுவழி சாலையாக இருக்கட்டும், நீட் தேர்வாக இருக்கட்டும் அனைத்தும் முழுக்க முழுக்க பா. ஜ. க. திட்டங்களை தான் செயல்படுத்தி வருகிறது. பா. ஜ. க. வின் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றி முடிக்க இன்னும் ஐந்தாண்டுகள் தேவை படுகிறது. அதனால் எப்படியும் மீண்டும் அ. தி. மு. க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று பா. ஜ. க. வியூகம் வகுத்து வருவதாக தெரிவித்தார். அதன் முன்னோட்டம் தான்
  மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கும் வரும் சட்டமன்ற தேர்தல்தான் காரணம் என்றார். 

  ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு முதன்முதலில் நீதிமன்றத்திற்கு சென்றது திராவிடர் கழகம். அதனை தொடர்ந்து தி. மு. க. வும் நீதிமன்றத்திற்கு சென்றது. ஆளும் கட்சி அ. தி. மு. க. வும் சுதாரித்து கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் கூட்டணி கட்சி பா. ம. க. வும் சென்றது. அதனால் ஓபிசி இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கோரிக்கையாக மத்திய அரசு பார்த்தது. அதனால் தேர்தல் வரவுள்ள காலத்தில் இது ஒரு பெரும் பிரச்னையாக மாறிவிடக் கூடாது என்று மத்திய அரசு கருதி அறிவித்துள்ளதாக கூறினார். 

  அப்படி என்றால் ரஜினி புதிய கட்சி தொடங்கும் திட்டம் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்டபொழுது, அதற்கு அவர் அளித்த பதில் சிந்திக்கக் கூடியதாகவே இருந்தது. கொரோனா வைரஸ் பரவல், நோய் தொற்று ஏற்படும் என்கிற பயம், அதனால் திடீர் ஊரடங்கு என்று குறைந்தது இன்னும் ஆறு ஏழு மாதத்திற்கு மக்கள் சுதந்திரமாக வெளியே வரமாட்டார்கள். இந்நிலையில் புதிய கட்சி தொடங்கினால் பொது கூட்டம், மாநாடு நடத்தி கூட்டத்தை காட்ட வேண்டும். அதுபோன்ற செயல் திட்டங்களுக்கு இனிமேல் சாத்தியம் இருப்பதாக தெரிய வில்லை. அதனால் ரஜினி புதிய கட்சி தொடங்குவார் என்கிற நம்பிக்கை இல்லை என்றார். 

  ரஜினி புதிய கட்சி ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கையில் அவருடைய ரசிகர்கள் கொரோனா நிவாரண பொருட்களை எல்லாம் வழங்கி வருகிறார்களே? என்று வினாவினோம். ரஜினி ரசிகர்கள் சிலருக்கு பா. ஜ. க. சின்னத்தில் நிற்க சீட் ஒதுக்கப்படும் என்றார். மேலும் அ. தி. மு. க. கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சி பா. ம. க. என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்டாலும், வரும் தேர்தலில் பா. ஜ. க. தான் இரண்டாவது பெரிய கடசியாக ஆதிக்கம் செலுத்தும். ரஜினியை காட்டி அதிக எண்ணிக்கையில் சீட் கேட்கும். அதில் ரஜினி ரசிகர்கள் சிலருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்றார். எப்படியோ அ. தி. மு. க தேர்தல் வேலையை தொடங்குகிறதோ இல்லையோ அதன் கூட்டணியில் இருக்கும் பா. ஜ. க. தேர்தல் வியூகம் வகுக்க தொடங்கி விட்டது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad