பெட்ரோல் டீசல் விலையேற்றம். தலைவர்கள் கண்டனம்
நாடு பொது முடக்கத்தில் முடங்கி கிடக்கும் போது மக்கள் தினமும் பயன்படுத்தி வரும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் உயர்த்தி வருகிறது. இதுகுறித்து தலைவர்கள் கருத்து.
கே. எஸ். அழகிரி. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிற கொடூர போக்கு கொண்ட அரசாக நரேந்திர மோடியினுடைய அரசு விளங்கி வருகிறது” என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை குறித்து குறிப்பிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி , "ரோம் நகரம் தீப்பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததை போல கொரோனாவின் கோரப்பிடியில் மக்கள் சிக்கி தவித்து கொண்டிருக்கும் போது பெட்ரோல், டீசல் மீது கலால் வரியை கடுமையாக உயர்த்தியது ஏன்?
வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிற கொடூர போக்கு கொண்ட அரசாக நரேந்திர மோடியினுடைய அரசு விளங்கி வருகிறது. இந்த விலை உயர்வு ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சுமையை அகற்றுகிற வகையில் பெட்ரோல் டீசல் விலையுர்வை திரும்ப பெறவில்லையெனில் மக்களின் கோபத்திற்கு ஆளாகி, மத்திய பா.ஜ.க. அரசு எதிர்காலத்தில் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவதற்கு இதுவே காரணமாக அமைந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் அறிக்கை
மத்தியில் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து பெட்ரோல் டீசல் மீதான எக்சைஸ் வரியை உயர்த்தி வருகிறார். இதனால் ஆண்டொன்றுக்கு இரண்டரை லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி வரை மத்திய அரசுக்கு வருவாய் வருகிறது. அந்த வருவாயைக் கொண்டு மக்கள் நலத் திட்டங்கள் எதையும் மத்திய அரசு செயல்படுத்துவதில்லை. மாறாக இதையெல்லாம் கார்ப்பரேட்டுகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பேரிடர் காலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கோ புலம்பெயர் தொழிலாளர்களுக்கோ எந்த ஒரு நிவாரணத்தையும் மோடி அரசு அளிக்கவில்லை. இதனால் மக்கள் சொல்ல முடியாத துன்பத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே வறுமையில் உழன்று கொண்டிருக்கும் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் விதமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது மோடி அரசு. மத்திய அரசு மார்ச் மாதத்தில் எக்சைஸ் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது.மே மாதத்தில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாயும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 13 ரூபாயும் எக்சைஸ் வரி உயர்த்தப்பட்டது.
உலகில் எந்த ஒரு நாடும் தனது குடிமக்களை இந்தப் பேரிடர் காலத்தில் இப்படி கொடுமைப்படுத்தவில்லை. ஈவிரக்கமற்ற அரசாக மத்திய அரசும் அதற்கு ஏற்ப தாளம் போடும் அரசாக தமிழக அரசும் இருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தட்டிக் கேட்க முடியாதபடி பொது முடக்கத்தை அறிவித்துவிட்டு அதைப் பயன்படுத்திக்கொண்டு இந்த மக்கள் விரோத விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதைத் தடுக்க முடியாது என்பதை ஆட்சியாளர்களுக்கு சுட்டிக் காட்டுகிறோம்.” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
No comments