Header Ads

  • சற்று முன்

    கொரோனா: தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த நீதிமன்றம் செல்வோம். மு. க. ஸ்டாலின்




    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு திணறி வருவதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாகக் கூறியிருக்கிறார்.

    கொரோனா தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் நடத்தினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தினார்.

    "கடந்த இரண்டரை மாதங்களாக கொரோனா நோய்த்தொற்றால் தமிழகம் மிக மோசமான பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. இறப்பு எண்ணிக்கையும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தச் சூழலைச் சமாளிக்க சரியான முடிவுகளை எடுக்காமல் தமிழக அரசு திணறுகிறது.

    தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று முதன்முதலாக மார்ச் 7ஆம் தேதி கண்டறியப்பட்டது. மார்ச் 21ஆம் தேதி மத்திய அரசு ஊரடங்கு அறிவிக்கும் வரை இரு வாரங்களில் தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தமிழகத்தில் மே 31-ம் தேதிவரை அதாவது 71 நாட்களில் 176 பேர் இறந்திருக்கிறார்கள். அடுத்த 15 நாட்களுக்குள் மட்டும் 259 பேர் இறந்திருக்கிறார்கள். இதனைப் பார்த்து மாநில அரசாங்கத்துக்கு பதற்றமோ படபடப்போ வந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் இந்த அரசாங்கம் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டு வந்துள்ளது என்று நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.


    சட்டமன்றத்தை ஒத்திவைத்து, கொரோனா தடுப்புப் பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தி.மு.க. எழுப்பியபோது, "இது மருத்துவ விவகாரம்" என்றும், வேறு எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்றும் கூறி முதலமைச்சர் எள்ளி நகையாடினார். முதலமைச்சரின் பொறுப்பின்மையால் இன்றைக்குத் தமிழ்நாடு இந்திய நாட்டில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலமாக மாறி விட்டது.


    ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை கருத்தில் கொண்டு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 5,000 ரூபாய் பண உதவி செய்ய வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியது. 2 லட்சம் கோடி ரூபாயில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் மாநில அரசுக்கு மக்களின் பட்டினியைப் போக்கும் இந்த நிதியுதவிக்கு 3,850 கோடி ரூபாய்தான் தேவைப்பட்டிருக்கும். மொத்த பட்ஜெட்டில் 2 சதவீதம் கூட இல்லாத இந்தப் பண உதவியை அ.தி.மு.க. அரசு மக்களுக்கு அளிக்க முன்வராததற்கு என்ன காரணம்?

    அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து கொரோனா பேரிடரில் மக்களை காப்பாற்ற வேண்டியது அவசியம் என்று கூறி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால் அதற்கு இந்த அரசு செவிமடுக்கவில்லை. கொள்ளை நோயின் காலத்தில் பிரதமரிடமும், அகில இந்திய எதிர்கட்சித் தலைவரிடமும் பேச முடிந்தது. ஆனால் நமது மாநில முதல்வரிடம் பேச முடியவில்லை.


    ஏப்ரல் 16ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் 1,000க்கும் கூடுதலான நோய்த்தொற்று இருந்த நேரத்தில் நோயின் தீவிரத்தை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்குப் பதிலாக "ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் கொரோனா போய் விடும்" என்று அறிவித்து மக்களைத் தவறாக வழிநடத்தினார் முதலமைச்சர்.


    "கொரோனா பணக்காரர்கள் வியாதி" என்றும் "வெளிநாட்டிற்கு" அல்லது "வெளிமாநிலங்களுக்கு" சென்று திரும்பியவர்கள்தான் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறி இந்நோய் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாதவராக இருந்தார். இன்றைக்கு அரசின் தகவலின்படியே 95 சதவீத கொரோனோ நோய்த்தொற்று தமிழகத்திற்குள்ளேயே உருவானது, வெளிநாட்டிலிருந்தோ, வெளிமாநிலத்திலிருந்தோ இறக்குமதி செய்யப்படவில்லை என்பதைப் பார்க்கும் போது முதலமைச்சர் சொன்னது ஜோக்கா?

    ஏப்ரல் 24ஆம் தேதி சென்னைக்கும் நான்கு நகரங்களுக்கும் "ஊரடங்கிற்குள் 4 நாள் ஊரடங்கை" திடீரென அறிவித்தார் முதலமைச்சர். இதனால் மக்களிடையே உண்டான பதற்றத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி கோயம்பேடு மார்கெட் உட்பட பல்வேறு கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தினமும் 50க்கும் குறைவாக இருந்த கொரோனா நோய்ப் பாதிப்பை ஒரு வாரத்திலேயே தினமும் 250ஆக உயர்த்தி மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றை பன்மடங்கு பெருக்கியது இந்த ஊரடங்கு.

    நோய்த்தொற்றின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து கொண்டிருந்தபோது, டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் அரசின் முடிவானது மிக வேதனையான முடிவு. சமூக இடைவெளி அங்கு காணாமல் போனது. லட்சக்கணக்கான மக்களின் உயிர் பற்றி கவலைப்படாமல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும் என்று அரசு அவசரமாக முடிவு எடுத்தது ஏன்?

    நோய்த்தொற்று மிக அதிகமாக இருந்த நேரத்தில், "ஜூன் 1ஆம் தேதி 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்துவோம்" என்று அறிவித்து "அதற்குள் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்து விடும்" என்று பொய்த் தோற்றத்தை மக்களிடம் அரசு ஏற்படுத்தியது. 31ஆம் தேதிவரை மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்த பிறகுதான் "தேர்வை நடத்த முடியாது" என்பதை தமிழக அரசு உணர்ந்தது. இப்படியான குழப்பமான அறிவிப்புகளை எந்த அடிப்படையில் அரசு அறிவித்தது?


    துவக்கத்திலிருந்தே பரிசோதனை மற்றும் இறப்பு குறித்து அரசு தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. மாவட்ட வாரியாக பரிசோதனை குறித்து ஒரு நாள் மட்டும் தகவல் வெளியிட்டார்கள். பின்பு அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.


    மே மாதம் 28ஆம் தேதி நிகழ்ந்த மரணம், மூன்று வாரம் கழித்து ஜூன் 7ஆம் தேதி அரசின் செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நிகழ்ந்த 7 மரணங்கள் நேற்று முன்தின செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. மரணங்கள் பற்றிய தகவல்களே இல்லாமல் அரசு எப்படி நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கிறது?

    சென்னையில் சுகாதார உட்கட்டமைப்பு நொறுங்கிப் போய் விட்டது என்பதைத்தான் இவையெல்லாம் வெளிப்படுத்துகின்றன. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுவதைப் பார்த்தால் இந்த நெருக்கடியை கையாள சரியான காலத்தில் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது.

    சென்னை மருத்துவமனைகளில் 460 பேர் இறந்துள்ளதாக ஜூன் 9ஆம் தேதி சென்னை மாநகராட்சி தெரிவித்தது. ஆனால் மாநில சுகாதாரத்துறை 224 பேர் மட்டுமே இறந்ததாக தெரிவித்துள்ளது.

    சென்னையில் கொரோனா வைரஸால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. ஊரடங்கு அறிவித்து 85 நாட்கள் ஆகியும் மரணத்தை முறைப்படி கணக்கெடுக்கும் ஒரு நடைமுறை ஏன் உருவாக்கப்படவில்லை? இதனைத் தொடர்ந்து முதலமைச்சர், "இறப்புத் தகவலை மறைக்க முடியாது. பத்திரிகைகள் உட்பட எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்" என்கிறார். ஊடகங்கள் கவனிக்கவில்லை என்றால் இறப்புகளின் எண்ணிக்கையை மறைக்கலாம் என்கிறாரா முதல்வர்?

    பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரின் பரிந்துரையின் பேரில், அரசு ஆணை எண் 196-ன் கீழ் கடந்த 20.4.2020 அன்று அனைத்து மருத்துவமனைகளிலிருந்தும் பெறப்பட்ட இறப்பு குறித்தான அறிக்கைகளைத் "தணிக்கை செய்வதற்கு" "ஒரு கமிட்டி" அமைத்தார்கள்.

    இப்போது மீண்டும் "ஒரு இறப்பு எண்ணிக்கை சரிபார்ப்பு" கமிட்டியை பழைய கமிட்டி உறுப்பினர்களை வைத்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரின் தலைமையில் நியமித்துள்ளார்கள்.

    முதல் கமிட்டி ஒரு முறையாவது கூடியதா? அது தொடர்பான தகவல்கள், அறிக்கைகள் ஏன் இதுவரையிலும் பொது வெளியில் இல்லை? அந்தக் கமிட்டி தோல்வியடைந்து விட்டதால் இரண்டாவது கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதா?

    தினமும் மாலையில் "கொரோனா நோய்" குறித்த செய்திக் குறிப்பு வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் ஏராளமான குளறுபடிகள் செய்து வருகிறார்கள். ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து 'ரிப்போர்ட்டிங் பார்மட்' தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி முதன்முதலாக 16 வகையிலான தகவல்களுடன் தினசரி செய்திக் குறிப்பு வெளியிட்டார்கள்.

    இன்றைக்கு 9 வகை தகவலுடன் முக்கிய தகவல்களை மறைத்து செய்திக் குறிப்பு வெளியிடுகிறார்கள். கோயம்பேடு மார்கெட் மூலம் தொற்றுக்கு உள்ளானவர்கள் குறித்த தகவல் மே 9ஆம் தேதிக்குப் பிறகு வெளியாகவில்லை. ஆனால் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்கள் கோயம்பேடு தொடர்பான தொற்று விவரங்களைத் தொடர்ந்து வெளியிட்டன. நோய் யார் மூலம் தொற்றியது அல்லது புதிதாக நோய் வந்ததா என்பது குறித்த தகவல் ஏதும் ஜூன் 1ஆம் தேதியிலிருந்து இல்லை.

    தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளில் எவ்வளவு படுக்கைகள் நிரப்பப்பட்டிருக்கின்றன என்பது குறித்த தகவல்கள் ஜூன் 3ஆம் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டு விட்டன. அதாவது உண்மை நிலையை மறைப்பதற்காகத்தான் மாற்றி மாற்றி அறிக்கை வெளியிடுகிறார்கள்.

    தி.மு.க. ஆக்கபூர்வமான முழு ஆதரவினை வழங்கியும், அ.தி.மு.க. அரசு முதலில் இருந்தே தொடர்ந்து நிராகரித்து வந்தது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் எடுத்துவைத்த ஆலோசனைகளை உடனே கேட்காமல், நிலைமை முற்றிய பிறகு அதனைப் பின்பற்றுகிறது தமிழக அரசு. பத்தாம் வகுப்புத் தேர்வை ஒத்திவையுங்கள் என்றேன். பிடிவாதமாக மறுத்த தமிழக அரசு பின்னர் ஒத்திவைத்து, அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தது.

    நடமாடும் மருத்துவமனை அமையுங்கள் என்றேன். இப்போதுதான் செய்கிறார்கள். அனைவருக்கும் முகக்கவசம் கொடுக்கச் சொன்னோம். அனைவருக்கும் இது தேவையில்லை என்று அமைச்சர் பதில் சொன்னார். இன்று அனைவருக்கும் கொடுக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

    தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சி என்ற முறையில் சில முக்கிய கேள்விகளை முதலமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன். இந்தக் கேள்விகளுக்கான பதில் மக்களுக்கும் தெரிந்தாக வேண்டும்.

    1. கொரோனா நோய்த் தடுப்பில் அரசு சிறப்பாக பணியாற்றுகிறது என்றும் சமூகப் பரவல் இல்லை என்றும் சொல்வது உண்மையென்றால், ஏன் கொரோனா நோய்த்தொற்று தினமும் ஏணிப் படிகள் போல் அதிகரித்து வருகிறது?

    2. கோவிட்-19ஐ அறவே ஒழிக்கிறோம் என்ற பெயரில் பொய்ப் பேட்டிகளை நிறுத்தி விட்டு மேல் நோக்கி உயர்ந்து கொண்டே போகும் கொரோனா நோய்த்தொற்று வரைபடத்தை தட்டையாக்குவதற்கான செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள்?


    3. ஊரடங்கு காலத்தில் கமிட்டி மேல் கமிட்டி நியமித்துள்ளீர்கள். ஆனால் இதுவரையிலும் எந்தக் கமிட்டியின் அறிக்கையும் பொதுவெளியில் இல்லை. பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறோம் என்று மக்களை எத்தனை நாளைக்கு ஏமாற்றப் போகிறீர்கள்?

    4. இந்த நெருக்கடியான நேரத்தில் ஆக்கபூர்வமாக ஆதரவளிக்க உத்தரவாதம் அளித்த எதிர்க்கட்சிகள், நிபுணர்கள், சம்பந்தப்பட்டவர்கள் ஆகியோருடன் கலந்துபேச ஏன் அரசு தொடக்கத்தில் இருந்து மறுத்து வருகிறது?

    கொரோனா
    5. பேட்டிகள், பெயரளவு அறிவிப்புகளை நிறுத்திவிட்டு கொரோனா பேரிடரின் விளைவாக, நிதி நிலை அறிக்கையில் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை மாற்றி அமைப்பது, பொருளாதாரத்தை மீட்பது, வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் எப்போது அரசு ஆர்வம் காட்டப் போகிறது?

    இது அரசியல் கேள்விகள் அல்ல. அரசியலுக்கான கேள்விகளும் அல்ல. மக்களின் உயிர் சம்பந்தமான கேள்விகள். இதற்கு நேர்மையான பதிலை தமிழக அரசு தரவேண்டும். உண்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் நடக்கும் அனைத்து முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும், குழப்பங்களுக்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி விரிவாக்கம் செய்ய வேண்டும். பரிசோதனைகளை பரவலாக்கி, அதிகப்படுத்த வேண்டும். வரும் அக்டோபர் - நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சி முகட்டை எட்டும் என்று ஐ.சி.எம்.ஆர் கொடுத்துள்ள எச்சரிக்கையை, தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை அக்கறையுடன் கவனிக்க வேண்டும்.

    கொரோனாவில் உயிர் இழந்த ஏழை எளியோர் குடும்பங்களுக்குத் தேவையான நிதி உதவி அளிக்க வேண்டும். இந்தப் பேரிடர் காலத்தில், அதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, அமைச்சர்களுக்கு இடையே நடக்கும், 'குழு மனப்பான்மை' அடிப்படையிலான, தன் முனைப்புச் சண்டை (Ego War) முடிவுக்கு வர வேண்டும். அதிகாரிகளுக்கிடையே நடக்கும் பதவிப் போட்டி, தவிர்க்கப்பட வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு, சிறப்புத் திட்டம் வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.

    அதோடு, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை, எந்தவித ஒளிவு மறைவும் இன்றி, கூட்டல் கழித்தல் இல்லாமல், அப்படியே அடுத்த இரண்டு நாட்களுக்குள், மக்கள் மன்றத்தின் முன் தமிழக அரசு வைக்க வேண்டும்.

    இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படவில்லை என்றால், திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்தை நாடும் என எச்சரிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad