சின்னத்திரை படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தம். தொழிலாளர்களின் வாழ்வாதாரம்..?
திரைப்படங்களைப் போலவே சின்னத்திரை தொடர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குடும்பப் பெண்கள் பலரும் பொதுபோக்கிற்கு சீரியல்களை பிரதானமாக எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த 2 மாதத்திற்கும் மேலாக சுமார் 75 நாட்கள் சின்னத்திரை தொடர் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தொலைக்காட்சிகள் புதிய எபிசோடுகள் இல்லாமல் பழைய தொடர்களை ஒளிபரப்பி வந்தன.
தற்போது 60 பேருடன் சீரியல் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் தொடங்கியது. அதன்படி முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சி தொடர்களான அன்புடன் குஷி, ஈரமான ரோஜாவே, தேன்மொழி பி.ஏ, பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர், செந்தூரப்பூவே, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், அரண்மனை கிளி, பாக்கிய லட்சுமி, யாரடி நீ மோகினி, ராஜா மகள், இரட்டை ரோஜா, கோகுலத்தில் சீதை, நீதானே என் பொன்வசந்தம், நாயகி, ஓவியா, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, ரோஜா உள்பட 28 தொடர்களின் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
படப்பிடிப்புகள் தொடங்கியதும், 60 பேருடன் படப்பிடிப்பை நடத்துவது, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது என அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப் படுகின்றனவா என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பார்த்தனர். இதனையடுத்து இந்த வாரம் முதல் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என சில தொலைக்காட்சிகள் விளம்பரம் செய்து வந்தன.
இந்நிலையில் தற்போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் 12 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தியத்தைத் தொடர்ந்து, ராசாத்தி,பாண்டியன் ஸ்டோர், பூவே பூச்சூடவா உள்ளிட்ட அனைத்து சீரியல்களின் படப்பிடிப்பும் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான சீரியல்கள் சென்னை புறநகரிலேயே படமாக்கப்படுகின்றன. இந்த முழு ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன.
No comments