Header Ads

 • சற்று முன்

  வி. பி. சிங் வெறும் பெயரல்ல: வரலாறு

  வரலாற்றில் சில பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டும் எஞ்சி நிற்பதில்லை. அவை, பெரும் வரலாற்றின் சாட்சியங்களாக, நீண்டதொரு கனவின் தொடக்கமாக உருப்பெற்று நிற்கின்றன. விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி. சிங்கின் பெயர், அப்படியான பெயர்களில் ஒன்று. இந்திய வரைபடத்தின் கோடுகளைப் போல சமமற்றுக்கிடந்த மக்களின் வாழ்வை சமநிலைப்படுத்தியவர் வி.பி.சிங். இன்று அவரது நினைவு தினம்.

  பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர், வி.பி.சிங். ஆனால், அவரது பிறப்பும் வாழ்வும் நேரெதிரானவை. உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை தத்தெடுத்துக்கொண்டார். படிப்பில் கெட்டிக்காரராக விளங்கிய வி.பி.சிங், அணுசக்தி விஞ்ஞான பாடத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.

  வி.பி.சிங்
  அரச குடும்பம், செல்வாக்கான வாழ்வு என்றிருந்தவர் வி.பி.சிங். வினோபாபாவேயின் பூமிதான இயக்கத்தின் செயல்பாடுதான் வி.பி.சிங்கின் பொதுவாழ்வில் குறிப்பிடத்தக்க முதல் விஷயம். அவரின் பூமிதான இயக்கத்துக்கு தனது சொந்த நிலங்களைத் தானமாக வழங்கினார்.

  எளிய மக்களின்மீது அக்கறையும், சமூக நீதி எண்ணமும் கொண்டிருந்த வி.பி.சிங், 1969-ல் தேர்தல் அரசியலில் வென்றார். உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் என்னும் பரமபதத்தை வி.பி.சிங் தனது நேர்மையாலும் திறமையாலும் திறம்பட எதிர்கொண்டு அதில் வெற்றியும் கண்டார். எம்.எல்.ஏ-வாகத் தேர்வான அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1971-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆனார். வி.பி.சிங்கின் திறமையை அறிந்த இந்திரா காந்தி, தனது அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக அவரை நியமித்தார்.

  எமர்ஜென்சி காலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட துறைகளில் வர்த்தகத் துறையும் ஒன்று. பதுக்கல் ஒழிக்கப்பட்டதன் வாயிலாக, விலைவாசி, அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. அதற்கு வி.பி.சிங்கின் பங்கு உண்டு என அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பர். குறுகிய காலத்திலேயே இந்திய அரசியலில் வி.பி.சிங்கின் பெயர் தவிர்க்க முடியாத ஒன்றானது.

  வி.பி.சிங்
  1980-ல் ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது இந்திய தேசிய காங்கிரஸ். இந்திரா காந்தி, வி.பி.சிங்கை உத்தரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக நியமித்தார். உத்தரப்பிரதேசத்தின் தென்மேற்கு மாவட்ட மக்கள் வழிப்பறி, கொள்ளை இவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். முதல்வரானதும் வழிப்பறி, கொள்ளையைத் தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டார் வி.பி.சிங். முழுவதுமாக கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாததற்குத் தானே பொறுப்பேற்றுக்கொண்டு, பதவி விலகவும் முன்வந்தார்.

  அவருடைய சகோதரர் கொலைசெய்யப்பட, உத்தரப்பிரதேச முதல்வர் பதவியை, பதவியேற்ற இரண்டு வருடங்களில் ராஜினாமா செய்தார் வி.பி.சிங். அவரின் இந்தச் செயல், அப்போதைய இந்தியா முழுக்க வி.பி.சிங்கின் பெயரை உச்சரிக்க வைத்தது. இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி வென்று ராஜீவ் காந்தி பிரதமரானார். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் நிதியமைச்சர் ஆனார் வி.பி.சிங். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சனின் சகோதரர் எனப் பலரும் அவரது நடவடிக்கைக்குத் தப்பவில்லை. 

  அவரின் நேர்மையான செயல்பாடுகள், பல முக்கியப் புள்ளிகளுக்கு அழுத்தம் தரவே, நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வி.பி.சிங்கை பாதுகாப்புத்துறை அமைச்சராக்கினார் ராஜீவ் காந்தி. இந்த நேரத்தில், ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்வீடன் வானொலி அறிவித்தது. இந்த விவகாரத்தில், பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், இம்முறை துறைமாற்றத்திற்குப் பதில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். உடனே வி.பி.சிங், தனது எம்.பி பதவியையும் கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

  மக்களவையிலிருந்து விலகியதும், அருண் நேரு & ஆரிப் முகமது கானுடன் இணைந்து, 'ஜனமோர்ச்சா' என்ற கட்சியைத் தொடங்கினார். இவர் பதவி விலகியதால், அலகாபாத் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. பைக்கில் பயணம், தலையில் கட்டப்பட்ட துண்டு என மக்களோடு மக்களாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, வெற்றி வி.பி.சிங்கின் வசம் வந்தது. கடும் போட்டிக்கிடையே, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அனில் சாஸ்திரியைத் தோற்கடித்தார். அக்டோபர் 11 அன்று 1988-ல் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து, ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தனர். ஜனதா தளத்திற்கு வி.பி.சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலக் கட்சிகளான தி.மு.க, தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கன பரிஷத் ஆகியவற்றுடன் இணைந்து, தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது. அப்போது நிலவிய அரசியல் சூழலில், வி.பி.சிங் ஒரு முக்கியத் தலைவரானார்.

  வி.பி.சிங்
  1989-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய முன்னணியைக் கட்டமைத்து, ஆட்சியையும் அமைத்துக் காட்டினார், வி.பி.சிங். டிசம்பர் 1, 1989 அன்று, வி.பி.சிங் நாடாளுமன்ற அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஹரியானாவின் ஜாட் தலைவரான தேவிலால், பரிந்துரையை ஏற்க மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். இந்திய அரசியலின் மிகச் சிறந்த தருணங்களில் அதுவும் ஒன்று. பாபா சாகேப் அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்த பெருமையும் சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்கையே சேரும்.

  இந்திய அரசியலில் மிக முக்கிய சீர்திருத்தத்தை அப்போது நிகழ்த்தினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார் வி.பி.சிங். அவரின் இந்த செயல், இந்தியாவின் அசமன்பாடுகளைத் தவிடுபொடியாக்கி, பல எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற உதவியது. இடஒதுக்கீடு, வி.பி.சிங் ஆட்சிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. தொடர்ச்சியாக அத்வானியின் கைது போன்ற சம்பவங்கள் வி.பி.சிங்கின் அரசியல் அஸ்திவாரத்தை அசைத்தன. பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

  "ஒரு தலைவன் இருந்தான்!" - வி.பி. சிங் 

  அவர் ஆட்சி செய்தது என்னவோ வெறும் 11 மாதங்கள்தான். அந்த 11 மாதங்களில், 'இந்திய அரசியலில் தன்னிகரற்றவர் வி.பி.சிங் ' என்ற பெரை அவருக்குப் பெற்றுத்தந்தது. அதன் பிறகு, பொது வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தவர், 2006-ம் ஆண்டு ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார். 2006-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் தாத்ரி பகுதியில், விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதைக் கண்டித்து, தீவிரமான போராட்டங்களில் பங்கெடுத்தார். பிரதமர் பதவியைவிட்டு விலகும்போது, "பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை" என முழங்கிய வி.பி.சிங், கடைசி வரை அதுபோல வாழ்ந்தும் காட்டினார். ஏழைகளின் பகதூர், இடஒதுக்கீட்டின் நாயகன் எனக் கொண்டாடப்பட்ட வி.பி.சிங், புற்றுநோய் காரணமாக 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார். அவரது பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது.

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad