தொடர்ந்து ஏழாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு...
சா்வதேச சந்தையில் விற்பனையாகும் கச்சா எண்ணெய்யின் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிா்ணயம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்தது. அதன் காரணமாக, இந்தியாவில் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையிலேயே இருந்து வந்தது.
தற்போது கட்டுப்பாடுகளில் தளா்வு அளிக்கப்பட்டுள்ளதால், பெட்ரோல் -டீசல் விலையை தினசரி மாற்றியமைக்கும் நடைமுறையை கடந்த எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. கடந்த 7-ஆம் தேதி முதல் விலையில் மாற்றம் செய்து வரும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து ஏழாவது நாளாக சனிக்கிழமையன்றும் விலையை உயர்த்தின. அந்த வகையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 59 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 58 காசுகளும் உயா்த்தப்பட்டது.
இந்த விலை உயா்வு காரணமாக, சென்னையில் பெட்ரோல் லிட்டா் ரூ. 78.99-ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.64-ஆகவும் உயா்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களின் இந்த தொடா் விலை உயா்வு நடவடிக்கை காரணமாக கடந்த 7 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.9 என்ற அளவிலும், டீசல் விலை ரூ. 4 என்ற அளவிலும் உயா்ந்துள்ளன.
No comments