பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமி- ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ..
அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நாகூரான், செல்வி தம்பதியின் ஏழு வயது மகள், அவர்களது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் இரத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் வந்த போலீசார், ரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இந்த சூழலில் 7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், தானாக முன்வந்து விசாரணையை துவக்கி உள்ளது.
இந்நிலையில் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்டதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், “அறந்தாங்கி சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.
சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
No comments