Header Ads

  • சற்று முன்

    கவிஞர் நா. முத்துக்குமார் மகன் எழுதிய மழலை கவிதை

    காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்தவர் நா.முத்துக்குமார். சிறு வயது முதலே படிப்பிலும், எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற ஆர்வத்துடன், இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

    முத்துக்குமாரின் கவிதை இயற்றும் திறனைப் பார்த்து வியந்த அவரது நண்பரும், இயக்குனருமான சீமான் தனது "வீரநடை' திரைப் படத்தின் மூலம் நா.முத்துக்குமாரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். அதன்பின் 'காதல் கொண்டேன்', 'பிதாமகன்' தொடங்கி தமிழ் சினிமாவில் 92க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

    பாடலாசிரியர்கள் வரிசையில் தனி இடம் பதித்த நா. முத்துக்குமார், 'தங்கமீன்கள்' படத்தில் எழுதிய ’ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலுக்காகவும், 'சைவம்' படத்தில் எழுதிய ’அழகே அழகே’ பாடலுக்காகவும் தேசிய விருதுகள் பெற்றார். அதோடு மட்டுமல்லாமல் 5 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். 20க்கும்  அதிகமான நூல்களையும் படைத்திருக்கிறார்.


    ''ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது’ , ''காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம், காற்றிடம் கோபம் கிடையாது'', ''அலை கரையைக் கடந்த பின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி'','' என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா மண்ணில் வந்த நான் உன் நகலல்லவா'', ''பேசிப்போன வார்தைகள் எல்லாம் காலம்தோறும் காதினில் கேட்கும், உருகுதே உருகுதே... பூக்கள் பூக்கும் தருணம்.. என் காதல் சொல்ல நேரம் இல்லை..'' போன்ற தனித்தன்மையான வரிகளால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நா.முத்துக்குமார்.

    4 ஆண்டுகளுக்கு இவ்வுலகை விட்டுப் பிரிந்தா  நா.முத்துக்குமாரின் 45-வது பிறந்த நாள் இன்று!.. பலரும் அவரது கவிதைகள் மற்றும் பாடல் வரிகளை நினைவு கூர்ந்து வரும் வேலையில், அவரது மகன் ஆதவன், தந்தைக்காக  ஒரு கவிதை எழுதியுள்ளார். அது,


    என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்

    அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்!

    என் தந்தையின் பாடல்கள் சொக்கத்தங்கம்

    அவர் எங்கள் காட்டில் சிங்கம்!

    என் தந்தையின் வரிகள் முத்து

    அவர்தான் எங்களின் சொத்து!

    என் தந்தையை எனக்கு ரொம்பப் பிடிக்கும்

    அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்!

    என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா

    எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா!

    எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள்தான் அப்பா

    இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்திருந்தால் என்ன தப்பா?

    -மழலைக் கவிஞர் ஆதவன் முத்துக்குமார்

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad