Header Ads

 • சற்று முன்

  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த நாள்: உலகம் மாபெரும் கலைஞனை இழந்த நாள்  விழுப்புரம் மாவட்டத்தில் 1927 ஆம் ஆண்டு பிறந்த சின்னய்யா கணேசன்தான், பின் நாட்களில், தமிழ் சினிமாவின் நடிப்புச் சக்ரவர்த்தியாக மிளிர்ந்த சிவாஜிகணேசன். 

  சிறுவயதில் படிப்பில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாத காரணத்தினால், நாடகம், பஜனை பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

  1935 ல் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனி, எம்.ஆர்.ராதா கம்பெனி, என்.எஸ்.கே. நாடக சபா உள்ளிட்ட பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து நடித்தார்.

  1945 ஆம் ஆண்டு ஒரு நாடகத்தில் சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்தபோது, இவரது நடிப்பினைப் பாராட்டிய தந்தை பெரியார், இவரை சிவாஜி கணேசன் என்று பாராட்டினார். அன்றுமுதல் வி.சி.கணேசன், சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டார். 1952 ல் கலைஞர் கருணாநிதி  கதைவசனம் எழுதிய பராசக்தி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் தமிழ் சினிமாவில் புதிய வரலாறை படைத்தது.

   அதனை தொடர்ந்து மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன், கப்பலோட்டியத் தமிழன் உள்ளிட்டத் திரைப்படங்களில் இவர் பேசிய வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அபார நடிப்புத் திறனும், உடல்மொழியும்தான் சிவாஜியின் தனிச்சிறப்பு.

  காதல், வெற்றி, தோல்வி, வீரம், கோபம், சாந்தம், நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பு, பணக்காரன், ஏழை, கிராமவாசி, நகரவாசி என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று கூறலாம். 

  பாசமலர், வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், தில்லானா மோகனாம்பாள், நவராத்திரி, வியட்நாம் வீடு, திருவருட்செல்வர், திருவிளையாடல், கர்ணன் உள்ளிட்ட வெற்றித் திரைக்காவியங்கள் சிவாஜிக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தன.

  அந்நாட்களில் நடிக்க வருபவர்கள் பேசிக் காட்டுவது பராசக்தி, திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன், மனோகரா உள்ளிட்ட திரைப்பட வசனங்களைத்தான்.

  டி.எம். சவுந்தரராஜன் இவருக்காகப் பாடிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தன. திரையுலகில் நேரம் தவறாமைக்கு இன்றும் உதாரணமாக சொல்லப்படுபவர் சிவாஜிதான். தமிழில் ஏறக்குறைய 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

  கவுரவ வேடங்களில் ஐந்து மொழிகளில் 19 திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது திரைப்படங்களில் பெரும்பாலானவை கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சிவாஜி நாடக மன்றம் தொடங்கி பலருக்கு வாய்ப்பளித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

  கலைமாமணி விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், செவாலியே விருது, தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

  நடிப்புச் சக்ரவர்த்தி, சிம்மக்குரலோன், என்றெல்லாம் போற்றப்பட்டவர்.  திரையுலகில், புதிதாக அறிமுகமாகும் நடிகர்கள் பலரிடம் ஏதோ ஒருவகையில், தாக்கத்தை ஏற்படுத்தியவராக இருக்கிறார். அரசியலில் ஈடுபாடும் காமராஜரிடம் பற்றும் கொண்டிருந்தார்.

  1982 ல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்த் திரையுலகின் ஒரு சகாப்தமாக தடம் பதித்த சிவாஜி கணேசன், அரசியல் களத்தில் தோல்வி மட்டுமே கிடைத்தது. 2001-ம் ஆண்டு ஜூலை 21ல் காலமானார்.

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad