Header Ads

 • சற்று முன்

  மனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள மூன்று வழிமுறைகள் : என். கே. மூர்த்தியின் கேள்வி --பதில்  பாலாஜி-ஆவடி
  கேள்வி : ஆவடி மாநகராட்சியில் பாராட்டும்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லையா? 

  பதில்: அதிகாரிகளின் கவன குறைவினால் சில நல்லதும் நடந்திருக்கிறது. 

  உதாரணத்திற்கு கழிவு நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் விடும்போதெல்லாம் பெரும் மோதலும் முறைகேடுகளும் நடக்கும். இப்பொழுது அந்த முறை ரத்து செய்துள்ளனர். அதேபோல் நடைபாதை வரி வசூல், வாகன வரி வசூல் செய்து வந்த டெண்டரையும் ரத்து செய்துள்ளனர்.

  வீரபாண்டி -பட்டாபிராம் 
  கேள்வி : மனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ளவே முடியவில்லையே? 

  பதில் : பெரிய பெரிய அறிவாளிகளுக்கே இந்த குழப்பம் இருந்து வருகிறது. இதில் நான் சமீபத்தில் படித்த தகவலை உங்களிடம் பகிர்ந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். 
  1 பாக்கு மரத்திற்கு எப்பொழுதும் தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அது வளரும். இல்லை என்றால் குன்றிவிடும். 

  2 தென்னை மரம் எப்பொழுதாவது தண்ணீர் ஊற்றினால் போதும், வளர்ந்து பயன் தரத்தொடங்கி விடும்.

  3 பனை மரமோ, விதை மட்டும் ஊன்றினால் போதும். தானே வளர்ந்து விடும். தண்ணீரை அதிகம் எதிர் பார்க்காது. 

  இந்த மூன்று வகை மரங்களைப் போல் மனிதர்களையும் பிரித்துக் கொள்ளலாம். 

  பாக்கு மர மனிதர்களுக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உடன் இருப்பார்கள். கொடுப்பதை நிறுத்தி விட்டால் பறந்துவிடுவார்கள். 

  தென்னை மர மனிதர்களுக்கு ஒரு முறை உதவி செய்தால் போதும். காலம் முழுவதும் நன்றியுடன் நடந்து கொள்வார்கள். 

  பனை மரம் எப்படி எதையும் எதிர்பார்க்காமல் வளர்ந்து பயன் தருகிறதோ அதுபோல் சிலர் மட்டுமே எந்த பலனும் எதிர் பாராமல் உடன் இருப்பார்கள்.

  அகஸ்டின் - ஆவடி
  திராவிடம் பேசி இனியும் ஏமாற்ற முடியாது என்கிறாரே பா. ஜ.க தலைவர் முருகன்? 

  பதில்: அவர் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்பதற்கும், கேள்வி எழுப்புவதற்கும் அடிப்படை காரணமே திராவிட இயக்கங்கள்தான். 

   திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிரான சித்தாந்தம். ஆரியம் இந்து மக்களை மயக்கி ஏமாற்றுகிறது. திராவிடம் இந்து மக்களுக்கு அடிப்படை தேவையான கல்வியை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. 
  இப்பொழுது கூட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டை பெற்று தந்தது திராவிட இயக்கங்கள் தான். இதைத்தான் முருகன் ஏமாற்று என்று கூறுகிறாரோ?

  விவேக் - பட்டாபிராம் 

  கேள்வி : சமீபகாலமாக பிரபலங்கள் மீது ஆபாசமான பதிவுகளும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருபவர்கள் மீது எது மாதிரி சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும்? 

  பதில் : எனக்கு சட்டரீதியான அறிவு கிடையாது. அதனால் ஒரு பிரபல வழக்கறிஞர் தெரிவித்ததை அப்படியே தருகிறேன். 

  அவதூறு பரப்பிய நபர் மீது சிவில் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நஷ்டஈடு பெறலாம்.

  தெரிந்த அல்லது தெரியாத நபர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யலாம். ஒருவேளை காவல்துறையினர் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய மறுத்தால்,154(3) பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறையிடலாம். இதோடு 200 Cr.P.C குற்றவியல் நடைமுறை குறியீட்டின்படி தனி புகாரும் அளிக்கலாம்.

  இவற்றுடன் ஃபேஸ்புக், இன்ஸடாகிராம், ப்ளாக்ஸ்பாட் என எதில் அவதூறு பரப்பப்பட்டாலும், அதனுடைய சப்போர்ட் பக்கத்தில் அதை நீக்குமாறு புகார் அளிக்கலாம். இந்த மூன்று செயல்முறைகளையும் ஒரே நேரத்தில் கூட பின்பற்றலாம்.

  இதோடு தெரிந்த நபர், வேண்டுமென்றே அவதூறு பரப்புவதை மேற்கொண்டிருந்தால், அதை உடனடியாக நிறுத்தவும், செய்வதைத் தவிர்க்கவும் நோட்டீஸ் அனுப்பலாம். இந்த நோட்டீஸிற்கு பிறகும் அவர் அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டால் கிரிமனல் குற்றப் பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 கீழ் 66சி, 66டி, 66இ, 67, 67ஏ, 71, 72, ஐபிசி 503, 499, 464, 469, 500, 507, 292, 294 போன்ற குற்றப் பிரிவுகள் நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் பொருந்தும்.

  குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள்:

  மேலே சொன்ன குற்றப் பிரிவுகளைத் தவிர்த்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களுக்குத் தனிச் சட்டப் பிரிவுகள் உள்ளன. இவர்களுக்கு எதிராக நடக்கும் சைபர் குற்றங்களுக்கான நடவடிக்கைகளை சமூக வலைதளங்கள் விரைவாக எடுக்கின்றன. இதற்கு சமூக வலைதளங்களில் உள்ள சமூக வழிகாட்டுதல்கள் பக்கத்தில் (Community guidelines support) குழந்தைகளுக்கு எதிரான குற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் .

  திலீபன் -செங்குன்றம் 
  கேள்வி : வேதங்களைப் பற்றி நிறைய விமர்சனம், விவாதம் வருகிறதே? 

  பதில்: "ஜப ஸ்தப தீர்த்த யாத்திர
  பிரவர்ஜ்ஜய மந்த்ர சாதனம்

  தேவாராதனம் சகசய் வஸ்திரீ

  சூத்திர பததானிஷள்"

  இது தர்ம சாஸ்திரம் 

  ஒரு சூத்திரன் கொலை செய்தால் அவன் தலை வெட்டப்பட வேண்டும். ஒரு பிராமணன் கொலை செய்தால் அவன் தலைமுடியை வெட்டினால் மட்டும் போதும். இது தர்மமாக மட்டும் அல்ல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சட்டமாகவே இருந்தது என்பது தான் வேதனைக்குறியது.

  கிரி- அம்பத்தூர் 
  கேள்வி: ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் குறித்து? 

  பதில் : சச்சின் பைலட்  43 வயதில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர், துணை முதலமைச்சர் என்று உயர்ந்து கொண்டே போகிறார். அவருடைய ஆற்றல், திறமை, உழைப்பை நினைத்தால்  பிரமிப்பாக இருக்கிறது. அவர் காங்கிரஸ் கட்சியிலே நீடித்தால்  பிரதமராகக்கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எவ்வளவு விவரமானவராக இருந்தாலும் பா. ஜ. க. மற்றும் அதன் தாய் அமைப்பு ஆர். எஸ்.எஸ்ப் பற்றி அவர் தெரிந்து கொள்ளாமல் மாய வலையில் சிக்கப் போகிறார்.

  அருண் - சங்கராபுரம் 

  கேள்வி : பொதுவாக அரசு அதிகாரிகளின் பணி எப்படி இருக்கிறது? 

  பதில்: உங்களுக்கு தெரிந்த கதை ஒன்றை சொல்கிறேன். சாலையில் மரம் நடும் பணி. ஒருவருக்கு குழி தோண்டும் வேலை. இன்னொருவருக்கு தோண்டப்பட்ட குழியில் மரக்கன்றுகளை நடும் வேலை. மற்றொருவருக்கு மரக்கன்று நட்டக்குழியில் மண்ணைத் தள்ளி மூடும் வேலை என்று மூன்று பேர் மரம் நடும் வேலையில் ஈடுபட்டு வந்தனர். ஒரு நாள் மரக்கன்றுகளை நடும் பணியை செய்து வந்தவர் வரவில்லை. விடுமுறையில் சென்று விட்டார். பணிக்கு வந்த மற்ற இருவரும் கடமையை தவறாமல் செய்தனர். ஒருவர் குழியை தோண்டினார். இன்னொருவர் தோண்டப்பட்ட குழியில் மண்ணைத் தள்ளி மூடிக்கொண்டே வந்தார். இதை பார்த்த வழிபோக்கர் ஒருவர்  உங்கள் வேலை மரக்கன்றுகள் நடுவதுதானே ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டார். அவரவர் வேலையை மட்டும் அவரவர் செய்யுங்கள் என்று மேல் அதிகாரிகளின் உத்தரவு. அதன்படி தான் செய்கிறோம் என்றார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகள், வருவாய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கிறது.

  அழகன்
  அயப்பாக்கம் 
  கேள்வி : சுறுசுறுப்பிற்கு உதாரணம் ஏதாகிலும் கூறமுடியுமா? 

  பதில் : கவிஞர் வைரமுத்து எழுதிய அழகான ஒரு கவிதையை உதாரணமாக சொன்னால் பொருத்தமாக இருக்கும். 

  கவிதையின் தலைப்பு எறும்புகளோடு பேச்சு வார்த்தை.

  எறும்புகளே எறும்புகளே 
  உயிர்துளிகளின் ஊர்வளங்களே
  உலகின் மிகச்சிறிய பூச்சினமே 
  உலகின் மிகப்பெரிய ஆச்சரியமே 
  உங்களோடு சிறிது நேரம் பேச வேண்டும். 
  செவி சாய்ப்பீரா 

  அதற்கு எறும்பு கூறும் பதில்

  நின்றுபேசி நேரம் கழிக்க
  நாங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை
  எது பேசுவதாக இருந்தாலும்
  எம்மோடு ஊர்ந்து வாருங்கள் 
  பேசி செல்லலாம். 

  இது போதுமனதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad