”தயவு செய்து என் போட்டோவை வைத்து இப்படி பண்ணாதீங்க..?!” - வேண்டுகோள் விடுக்கும் நடிகர் யோகி பாபு...
தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து, இப்போது முன்னணி கதாநாயகராக வளர்ந்து இருப்பவர் யோகி பாபு.. சமீப காலமாக விஜய் சேதுபதி, யோகி பாபு போன்ற நடிகர்கள் ஒரு பிரச்னையை சந்தித்து வருகின்றனர். சிறு கதாபாத்திரங்களில் நடித்த படத்தில் கூட, கதாநாயகன் என விளம்பரப்படுத்தி வருகின்றனர்..
ஏற்கெனவே ஜீ5 தளத்தில் வெளியான ’காக்டெய்ல்’ படத்தில் இதேபோல் விளம்பரப்படுத்தியதற்காக யோகிபாபு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.. ஆனால், தொடர்ச்சியாக இது நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் ரைட் ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாராகியுள்ள படம் 'தெளலத்'. ஷக்தி சிவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார்.
ஆனால் 'தெளலத்' போஸ்டரில் யோகி பாபு மட்டும் தனியாக இருப்பது போன்று வடிவமைத்து வெளியிட்டது படக்குழு. இது தொடர்பாக தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார் யோகி பாபு. தற்போது தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்..
அதில், "சில வருடங்களுக்கு முன்பு சின்ன சின்ன படங்களாக நிறைய நடித்துள்ளேன். அந்தப் படங்கள் எல்லாம் இப்போது வெளியாகிறது. அந்தப் படங்களில் எல்லாம் 2, 3 காட்சிகள் தான் நடித்திருப்பேன். இப்போது என்னுடைய புகைப்படத்தைத் தனியாக போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்துகிறார்கள். தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீர்கள்.
எனக்கென்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இந்த மாதிரியான போஸ்டர்களால் ஏமாந்து போய்விடுகிறார்கள். இடைப்பட்ட காலங்களில் என்னுடைய புகைப்படம் மட்டும் போட்டு சிலர் ஏமாற்றியுள்ளார்கள். சிலர் எனக்கு தொலைபேசி வாயிலாக, உங்கள் புகைப்படத்தைப் பார்த்து தான் வாங்கியிருக்கிறோம் என்று சொன்னார்கள்.
"அண்ணா, முழுமையாக இருப்பீர்கள் என நம்பி திரையரங்கிற்குச் சென்றோம். ஆனால், 2 - 3 காட்சிகளில் தான் வருகிறீர்கள். என்ன அண்ணா இது" என்று சில ரசிகர்கள் தொலைபேசி வாயிலாகக் கேட்டார்கள். இதனால் எனக்கு மனவேதனையாக இருக்கிறது. இடையே 'தெளலத்' என்ற படத்துக்குக் கூட அப்படியொரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் சிவன் தான் ஹீரோ, நான் அல்ல. தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீர்கள்.
என்னை முன்னிலைப்படுத்தி படங்கள் எடுக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் திட்டத் தொடங்கிவிட்டார்கள். விநியோகஸ்தர்கள், ரசிகர்களை எல்லாம் ஏமாற்றுவது போல் இருக்கிறது. தயவு செய்து அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.
நான் முழுமையாக நடித்திருந்தால் போடலாம் தவறில்லை. ஆனால் 2-3 காட்சிகளுக்கு எல்லாம் போடுவது தவறு. அது எனக்குத் தான் பாதிப்பாக இருக்கிறது. 2-3 சீன் நடித்திருக்கிறேன் என்றால் அந்தப் படக்குழுவினரோடு இருப்பது போல் புகைப்படம் போடுங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள். தயவு செய்து தனி புகைப்படம் போட்டு போஸ்டர்கள் வெளியிடாதீர்கள்" என்று யோகி பாபு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்..
தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு என் பணிவான வேண்டுகோள் pic.twitter.com/dtR86Bm0pO
— Yogi Babu (@yogibabu_offl) August 14, 2020
No comments