ஆவடி ஆளும் கட்சியினர் உச்சக்கட்ட கோஷ்டி மோதல், ரசித்து கொண்டிருக்கும் தி.மு.க
மாநிலம் முழுவதும் உளவுதுறையினரால் எடுக்கப்பட்ட ரகசிய கருத்து கணிப்பில் 65 சதவீதம் தி.மு.க.விற்கு சாதகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் அ.தி.மு.க.விற்கும் தி.மு.க.விற்கும் கடும் போட்டி உள்ள தொகுதிகளில் ஆவடியும் ஒன்று என்று கூறப்படுகிறது.
2011 ம் ஆண்டு பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதியை பிரித்து முதன் முதலில் ஆவடி சட்டமன்ற தொகுதி உதயமானது. அப்போது நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அப்துல்ரஹீம் மாநிலத்திலேயே 43,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அப்துல் ரஹீமுனுடைய அந்த வெற்றிக்கு முதல் காரணம் தி.மு.க. விற்கு சாதகமான தொகுதியை கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தாரைவார்த்தது. இரண்டாவது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாமோதிரன் வெளியூர் வேட்பாளர் என்பது. இவை அனைத்தும் அ.தி.மு.க வேட்பாளர் அப்துல் ரஹீமுக்கு அப்போது சாதகமாக அமைந்தது. அதனால் அவர் மாநில அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தார். அமைச்சராகவும் உயர்ந்தார்.
அதன் பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆவடி பெரு நகராட்சியை 390 வாக்குகள் கூடுதலாக பெற்று தி.மு.க. கைப்பற்றியது. அதாவது சட்டமன்றத் தேர்தலில் 43,000 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிப் பெற்ற கட்சி ஆறு மாதக்கால இடைவெளியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை தழுவியது. அப்பொழுதில் இருந்து அப்துல் ரஹீமுக்கு சரிவு தொடங்கியது. ஐந்தாண்டு காலம் எம்எல்ஏ, அமைச்சர் என்று பதவியில் இருந்த அப்துல் ரஹீம், தொகுதியில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை என்றாலும் அவரை எப்பொழுது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் எளிதாக சந்திக்க முடியும் என்கிற நிலையை உருவாக்கி வைத்திருந்தார். அவரால் நல்லது நடந்ததோ இல்லையோ கெடுதல் எதுவும் இல்லை என்று மக்கள் பேசும் அளவிற்கு நல்ல பெயரோடு பதவி காலத்தை முடித்தார்.
2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த மாஃபா. பாண்டியராஜனை ஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்தார். தி.மு.க.சார்பில் உள்ளூர் பிரமுகரும் அரசியல் ஜாம்புவான் என்று பேசப்பட்ட ஆவடி சா.மு.நாசர் போட்டியிட்டார். அதேபோல் மக்கள் நலக் கூட்டணி சார்பில் ம.தி.மு.க. வேட்பாளர் அந்தரிதாஸ் போட்டியிட்டார். அந்த தேர்தலில் திமுக மிக சுலபமாக வெற்றி பெற்று விடும் என்று நினைத்து தேர்தல் பணியில் மெத்தனம் காட்டியது. அன்றைய நிலையில் அ.தி.மு.க.வினர் பாண்டியராஜன் வெளியூர் காரர் என்பதனாலும், அ.தி.மு.க.விற்கே புதியவர் என்பதனாலும் அவரை அக்கட்சியினர் ஏற்றுக் கொள்ள தயங்கினார்கள். ஜெயலலிதா என்ற மாபெரும் தலைவிக்கு பயந்து ஒருவரும் எதிர்த்து பேசாமல் தங்களுடைய அதிர்ப்தியை வெளிபடுத்த முடியாமல் மவுனமாகவை இருந்தார்கள். ஆனால் மாஃபா. பாண்டியராஜன் தன்னுடைய அனுகுமுறையினால் கட்சியினரை ஒருங்கிணைத்து, சாதூரியமாக பணியாற்றி அந்த தேர்தலில் ஆச்சரியப்படும் வெற்றியை பெற்றார். அந்த வெற்றி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையே ஆச்சரியப்பட வைத்தது. அதனால் அவருக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் பதவியும் வழங்கி அழகு பார்த்தார். ஜெயலலிதா மறைந்தார், அமைச்சர் பாண்டியராஜனுக்கும் போதாத காலம் ஆரம்பமானது.
ஜெயலலிதா மறைந்ததும் நிழல் முதலமைச்சர் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்று கட்சி இரண்டாக பிரிந்து மீண்டும் இணைந்தது. ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் இரண்டு அணியாகவே இயங்கி வருகின்றனர். அதே கோஷ்டி மோதல் ஆவடி சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தலைமையில் ஓபிஎஸ் அணியாகவும் முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் தலைமையில் இபிஎஸ் அணியாகவும் பிரிந்து பணியாற்றி வந்தவர்கள், இப்போது ஒருவரோடு ஒருவர் மோதி பணியாற்ற தொடங்கி விட்டார்கள். இந்த மோதலை தி.மு.க. தரப்பினர் அமைதியாக ரசித்து வருகின்றனர்.
No comments