வாழ்க்கை அழகான பொய்; மரணம் கசப்பான உண்மை
*பிறப்பென்னும் பேதைமை நீங்கிச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு
திருக்குறள்*
----------------------------------------
என்.கே.மூர்த்தி
----------------------------------------
அடுத்த பிறப்பு என்னும் அறியாமையை போக்கி தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமை.
இது சுருக்கமான விளக்கம்.
"பிறப்பென்னும் பேதைமை"
அடுத்த பிறப்பு என்பது அறியாமை என்கிறார் வள்ளுவர்.
அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டு தானியவகைகளையும் வெவ்வேறு அளவில் எடுத்து ஊறவைத்து, அதனை அறைத்து புளிப்பேற்றி வேதியல் மாற்றம் நிகழ்ந்த பின்னர் உணவாக மாறுகிறது. அதேபோல் நீர், நெருப்பு, நிலம், காற்று ஆகிய நான்கு தனிமங்களோடு ஆகாயமும் வெவ்வேறு வகையில் இணையும் போது உடல் தோன்றுகிறது. அதிலிருந்து உயிர் தொடங்குகிறது. உடலில் இருந்துதான் உயிர் தோன்றுகிறது. உடல் உறுப்பில் பாதிப்பு நிகழ நிகழ உயிரும் சிறிது சிறிதாக வெளியேறிவிடும். இதுதான் இயற்கை.
மறுபிறப்பு என்பது இருக்கிறதா? மறுபிறப்பைப் பற்றி ஏன் வலியுறுத்த வேண்டும்? இதுதான் நமது சந்தேகம்.
மறுபிறப்புப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
உயிர்,மனம் சேர்ந்த இந்த உடல் ஆயிரக்கணக்கான ஆசைகளை சுமந்து கொண்டு திரிகின்றது. அந்த ஆசைகள் பேராசைகளாக மாறிவிடுகிறது. அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்கு தினம் தினம் போராடுகிறது.
ஆசைகள் நிறைவேறாத மனம் மரணத்தைக் கண்டு பயப்படுகிறது. ஆசைகள் நிறைவேறும் வரை வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் மரணத்தை கண்டு அஞ்சுகிறார்கள்.
உடல் தேவைக்கான ஆசைகளாகவும் இருக்கலாம், மனத்தேவைகளுக்கான ஆசைகளாகவும் இருக்கலாம். ஆசைகள் நிறைவேறும் வரை உயிர் வாழவேண்டும்.
வாழ்க்கையின் காலம் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆசையின் பட்டியல் நீளமானதாக இருக்கிறது. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 64. அதில் மூன்றில் ஒரு பகுதி தூங்கி கழித்து விட்டார்கள். ஒரு பகுதி கல்வி, வேலை, காதல், கல்யாணம் செய்யவும் போய்விட்டது. மிச்சம் இருப்பது இருபது ஆண்டுகள் மட்டுமே. இந்த இருபது ஆண்டுகளில் நியாயமான ஆசைகள், நியாயமற்ற ஆசைகள் என்று அனைத்தையும் நிறைவேற்ற போராட வேண்டும். இடையில் மரணம் வந்துவிட்டால் என்ன செய்வது?
அந்த மரண பயத்தில் இருந்து விடுபடவே "உன் வாழ்வு மரணத்திற்கு பின்னும் தொடர்கிறது" என்று சமாதானப் படுத்தப் பட்டது. உன் ஆத்மா பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை என்று நம்பிக்கை ஊட்டப்பட்டது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான பிறவிகளில் வாழ்ந்து இருக்கிறோம். இன்னும் ஆயிரக்கணக்கான பிறவிகள் இருக்கப்போகிறது. ஒன்றும் அவசரம் இல்லை. உன் ஆசைகள் இப்பொழுது நிறைவேற்ற முடியாவிட்டாலும் பரவாயில்லை, அடுத்த பிறவியில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று வெற்று நம்பிக்கையை ஊட்டி வளர்க்கப்பட்டுள்ளது.
எப்பொழுது நான் வாழ்வது? மரணம் வேறு விரட்டுகிறது. எந்த நேரமும் கதவை தட்டலாம். மரணப் பயத்தின் அடிப்படைக் காரணம் நான் இன்னும் வாழவே இல்லையே என்பதுதான். வாழ்வை வாழ தவறவிட்டதனால் ஏற்படும் கவலை. ஒவ்வொரு நாளும் வாழ்க்கை சுருங்கிக் கொண்டே வருகின்ற கவலை.
வாழ்க்கையை அனுபவித்திருந்தால் இந்த பயம் இருக்காது. காலையில் மலரும் மலர் மாலையில் உதிர்ந்து விடுகிறது. ஆனால் அது வாழும் காலத்தில் தேடிவரும் வண்டுகளுக்கு தேன் கொடுக்கிறது. முகரக்கூடியவர்களுக்கு நல்ல நறுமணத்தை கொடுக்கிறது. பார்ப்பவர்களுக்கு அழகால் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. வாழ்க்கை வாழ்ந்தது. மரணத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது.
தத்துவ ஞானி சாக்ரடீஸ் அவர்களின் இறுதி வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.
கிரிஸ்து பிறப்பதற்கு 469 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதென்ஸ் நகரத்தில் பிறந்தவர் சாக்ரடீஸ். கடவுளை மறுக்கிறார், கடவுளுக்கு எதிரான கருத்துகளை பேசி இளைஞர்கள் மனதை கெடுக்கிறார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு மன்றத்தில் தீர்ப்பளிக்கின்ற உறுப்பினர்கள் 501 பேர். அதில் 281 பேர் சாக்ரடீஸ் குற்றவாளி என்று தீர்ப்பளித்து மரண தண்டனை வழங்கினர்.
தீர்ப்பை கேட்டதும் அவருடைய மாணவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். மரணம் என்றால் சாதாரண மனிதனுக்கு அழுகை வருவது இயற்கையே. அதிலும் சாக்ரடீஸ் போன்ற மாபெரும் மேதையை இழக்கிறோம் என்றால் அழுகையை அடக்குவது முடியாத காரியம். சாக்ரடீஸின் மாணவர்கள் ஓவென்று கூச்சலிட்டு அழுதார்கள்.
அப்பொழுது சாக்ரடீஸ் மெதுவாக தனது மாணவர்களிடம் பேசத் தொடங்கினார். "எல்லோரும் முதலில் அழுகையை நிறுத்துங்கள். எதற்காக அழுகிறீர்கள்? நான் என் வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டேன். அதுவும் முழுமையாக வாழ்ந்து முடித்துவிட்டேன். இப்பொழுது மரணம் வருகிறது. அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். அதற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். என் வாழ்க்கையில் புதியதோர் கதவு திறக்கப்போகிறது" அதனால் அழுகையை நிறுத்துங்கள் என்றார்.
ஒரு மாணவர், மரணத்தை கண்டு உங்களுக்கு பயமில்லையா என்றார்.
மரணத்தைக் கண்டு ஏன் பயந்து போகவேண்டும் என்று எனக்கு புரியவில்லை. முதலில் மரணம் எப்படி இருக்கும் என்று கூட எனக்கு தெரியாது. எனக்கு தெரியாத ஒன்றைப்பற்றி நான் ஏன் பயப்பட வேண்டும். இரண்டாவது, மரணத்திற்கு பின்னர் நான் இருக்கப் போவது இல்லை. அப்படி நானே இல்லாதபோது அதிலும் பிரச்சினை இல்லை. இங்கே இருப்பதை போன்றே இறந்த பின்னரும் இருக்கப் போகிறேன் என்றால் அதிலும் பிரச்சினை இல்லை.
இங்கே வாழும்போது பிரச்சினை இருந்தது. அவற்றை தீர்த்து வைத்து இருக்கிறேன். அதேபோல் அங்கேயும் பிரச்சினை வந்தாலும் அதையும் தீர்த்து வைப்பேன். எனவே நீங்கள் அழுது புலம்புவதை நிறுத்துங்கள் என்றார். பின்னர் அவருக்கு "கெமலாக்" என்ற கொடிய விஷம் வழங்கப்பட்டது. பருகி உயிரிழந்தார்.
" பேதைமை நீங்கிச்"
மரணத்திற்கு பின்னர் நிகழ்வது என்ன? அடுத்தப் பிறப்பு இருக்கிறதா? அப்படியே இருந்தால் அதுவும் மனிதப் பிறவியா? அல்லது வேறு ஏதாகிலும் ஒன்றா? அடுத்தப் பிறப்பும் மனிதன் என்றால், அதிலும் இப்பொழுது இருக்கின்ற துன்பத்தையும், துயரத்தையும் தான் அனுபவிக்க வைண்டுமா? அடுத்த பிறப்பு இருக்கிறது என்றால் இப்பொழுது நான் யார்? கடந்த பிறப்பில் நான் எதுவாக இருந்தேன்.? ஆகிய அனைத்து விதமான கேள்விகளையும் கேட்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
அடுத்த பிறப்பு என்பது காலங்காலமாக நம் மனதில் விதைக்கப்பட்டு வந்த மூடநம்பிக்கை. அறிவுக்கு பொருந்தாதது.
வாழ்க்கை என்பது மாபெரும் அற்புதம். மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் நிறைந்தது.
வாழ்க்கை ஒவ்வோரு நிமிடமும் வாழவேண்டியது.
வாழ்க்கை என்பது வேறொன்றும் அல்ல, வாழ்க்கையோடு ஒப்படைப்பது. மற்றவர்களிடம் அன்பு காட்டுவது.
அன்பு நிறைந்த வாழ்க்கை வாழும் காலத்தின் சொர்க்கம். அந்த வாழ்க்கை முறை சொல்லி க் கொடுத்து வருவதல்ல. இன்னொருவரால் சொல்லிக் கொடுக்கவும் முடியாது. தன்முனைப்பால் வருவது.
வள்ளுவருக்கும், சாக்ரடீசுக்கும் பிறப்பும், இறப்பும் ஒன்றுதான். அவர்களால் இரண்டையும் ஒரே மனநிலையில் பார்க்க முடிகிறது. பிறப்பு எவ்வளவு மகிழ்ச்சியானதோ அதேபோல் மரணம் என்பதும் மகிழ்ச்சியானது என்கிறார்கள். அதனை வரவேற்கிறார்கள்.
ஆனால் நமக்கு பிறப்பும் இறப்பும் வெவ்வேறு பகுதியாக தெரிகிறது. பிறப்பு மகிழ்ச்சியானதாக கருதுகிறோம். அதனை கொண்டாடுகிறோம். ஆனால் மரணத்தை தனிமைப்படுத்தி பார்க்கிறோம். அதனை வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஏற்க மறுக்கிறோம். அதனால் மரணம் துயரமானதாக மாறுகிறது.
பிறப்பு எந்தளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு சிறிதும் மாறுதல் இல்லாமல் மரணமும் உண்மையானது. நாம் இந்த உண்மையில் முரண்படுகிறோம். ஏற்க மறுக்கிறோம். மரணத்தை சந்திக்க முடியாமல் பயந்து ஓடுகிறோம். அதனை கடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றோம்.
"வாழ்க்கை என்பது காலத்தை கடத்துவது அல்ல, காலத்தோடு கலப்பது. அற்பணிப்பது."
பேராசையினால் அதைபிடிக்க வேண்டும், இதை பிடிக்க வேண்டும் என்று காலம் முழுவதும் அலைந்து கடைசியில் எதையும் பிடிக்காமல், பிடிக்க முடியாமல், ஏதோ வாழ்ந்தோம் என்று காலத்தை கடத்திய வாழ்க்கையில் மரணம் நெருங்கும்போது பயம் இயல்பாகவே வரும். காலத்தை கடத்திய வாழ்க்கை, காலத்தை விரயம் செய்த வாழ்க்கை பயம் கலந்த வாழ்க்கையாகத்தான் இருக்கும்.
வள்ளுவர், சாக்ரடீஸ் போன்றவர்கள் பயம் அறியாதவர்கள். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தார்கள். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர்களுக்கு பயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனால் அவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. அவர்கள் வாழ்ந்த பூமி மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. அதனாலேயே அவர்களுக்கு மரணமும் மகிழ்ச்சியானதாகவே இருந்தது.
மரணத்திற்கு பிறகும் ஒரு பிறப்பு இருப்பதாக மனதில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. அந்த விதை இன்று நேற்று விதைக்கப்பட்டதல்ல நீண்ட நெடிய காலத்திற்கு முன்பு விதைக்கப்பட்டது. வள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கு முன்பு விதைக்கப்பட்டது. மரபுவழியாக நாமும் அதனை நம்பிக்கொண்டே வாழ்ந்து வருகிறோம்.
அந்த விதை அறிவுக்கு பொருந்தாத ஆபத்தான விதை. தூய்மையான மனதில், அன்பு தாண்டவமாட வேண்டிய மனதில், மகிழ்ச்சி பொங்க வேண்டிய மனதில் தவறான விதை விதைக்கப்பட்டுள்ளது. அதனால் மனம் முழுவதும் பொறாமை, வெறுப்பு போன்ற முள்செடிகள் முளைத்து முள் காடுகளாக வளர்ந் திருக்கிறது. அதனால் மனிதன் வாழ்க்கை முழுவதும் துயரமும், கண்ணீரும் மட்டுமே நிரம்பியிருக்கிறது.
" செம்பொருள் காண்பது அறிவு"
மனிதனின் வாழ்க்கை முழுமை பெறவேண்டும் என்றால் அது மற்றவர்களுக்காக வாழ்வதில் தான் அடங்கி இருக்கிறது. நாம் ஒவ்வொருத்தரும் கணவன், மனைவி, பிள்ளை, அப்பா, அம்மா என்று ஏதோ ஒரு வழியில் மற்றவர்களுக்காகவே வாழ்கிறோம். அதுதான் வாழ்க்கை. ஆனால் அதுமட்டுமே வாழ்க்கை அல்ல. நாம் வாழும் சமூகத்தின் நலனுக்காகவும் வாழவேண்டும் என்கிறார் வள்ளுவர்.
"வாழ்க்கை அழகான பொய், மரணம் கசப்பான உண்மை. " உண்மையை எதிர்ப்பதும் கடைசியில் ஏற்றுக்கொள்வதும் வாழ்க்கையில் நிகழ்ந்து வரும் உண்மை.
No comments