’என் இதயம் கனிந்த நன்றி..’ - நெகிழ்ச்சி ட்வீட் வெளியிட்ட ரஜினி..
இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ரஜினிகாந்த்.. 1975 ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் "அபூர்வ ராகங்கள்" படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான ரஜினி, அதன்பின்னர் "16 வயதினிலே" தொடங்கி பல படங்களில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து 1978 ம் ஆண்டு கலைஞானம் தயாரிப்பில் வெளிவந்த "பைரவி" படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
அந்த காலத்தில் ரஜினியின் புதிய ஸ்டைல் மக்களை வெகுவாக கவர்ந்தது. சாதாரண குடும்பத்தில் பிறந்த நடிகர் ரஜினிகாந்த் தனது படங்களிலும் அதே ஒரு ஏழை, நடுத்தர மனிதனின் வாழ்க்கையை எதார்த்தமாக திரையில் கொண்டுவந்தார். அவரை பின் தொடர்ந்த ஒவ்வொரு ரசிகனும் தன்னைப் போலவே ரஜினி இருக்கிறார் என்று ஏற்றுக்கொண்டார்கள்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அழகாக இருக்க வேண்டும், அதிகமான நடிப்பு திறமை வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்தார். சாதாரண நடிப்பின் மூலம் இந்தியா சினிமா துறையே திரும்பி பார்க்கும் அளவிற்கு உயர்ந்தார். அவர் சினிமாவில் கால்பதித்து வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வந்தால் 45 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதனை இவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் , #45YearsOfRAJINISM எனும் ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வரும் அவர்கள், காமன் டிபி ஒன்றையும் உருவாக்கினர் . அதனை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மம்மூட்டி, சிவகார்த்திகேயன், கிரிக்கெட் வீரர் அஸ்வின் தொடங்கி பல முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், காமன் டிபி வெளியிட்டு வாழ்த்து கூறிய அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.. அவருடைய பதிவில், "என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை" என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻
— Rajinikanth (@rajinikanth) August 9, 2020
No comments