Header Ads

 • சற்று முன்

  அ. தி. மு. க. வில் முதல்வர் வேட்பாளர் : சசிகலா விடுதலை சாத்தியமா? அது ஒரு நாடகக் கம்பெனி


   சந்தானம்- அம்பத்துர்


  கேள்வி: தற்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு பெறுவது, பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பது என்று தேர்தலின் அர்த்தத்தையே சிதைத்து வருகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறீர்களா?


  என்.கே.மூர்த்தி: அப்படி சிதைப்பவர்களின் பட்டியலில் நாமும் சேர்ந்துதானே இருக்கிறோம். கொஞ்சம் நேர்மையோடு விவாதித்தோம் என்றால் இந்த ஜனநாயக சீரழிவிற்கு கேள்வி கேட்கும் உங்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் எனக்கும் பங்கிருக்கிறது என்பதை நேர்மையாக ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த நிலை மாற வேண்டும், ஜனநாயகம் மலர வேண்டும் என்கிற ஏக்கம் உங்கள் கேள்வியில் இருப்பதை உணர முடிகிறது.  நாம் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை எப்படி எல்லாம் போராடி பெற்றோம் என்ற வரலாற்று சம்பவத்தையும் அவ்வப்போது தெரிந்து கொள்வது அவசியம் என்று கருதுகிறேன். அந்த வலியும், தியாகத்தையும் தெரிந்து கொண்டால் நாம் நேரடியாக தவறு செய்யவோ, அல்லது தவறு செய்பவர்களுக்கு உடந்தையாகவோ இருக்க மாட்டோம் என்று கருதுகிறேன்.


  அது ஒரு புதுமையான மாறுப்பட்ட போராட்டம். 1860 ம் ஆண்டு லண்டன் மாநகரத்தின் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அங்கே உள்ள முதன்மை அஞ்சலக அலுவலகத்துக்கு ஒரு பெண்மணி வந்தார். அவர் பெண்கள் உரிமை இயக்கத்தின் தலைவி எமிலி பேங்கர்ஸ் அம்மையார். அவர் பிரதமரை சந்தித்து பிரச்சனையை சொல்ல முயன்றார். அனுமதி கிடைக்க வில்லை. ஆறுமாத காலமாக முயற்சித்தார். வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அதனால் அஞ்சல் அலுவலகத்தில் தலைமை அதிகாரி அறைக்கு சென்றார். லண்டன் டௌனிங் தெரு 10 ம் எண் வீட்டில் வசிக்கின்ற, இந்த நாட்டின் பிரதமருக்கு ஒரு பார்சல் அனுப்ப வேண்டும் என்றார்.

  என்ன பார்சல்? என்று அதிகாரி கேட்டார்.

  நான்தான், என்னைத்தான் பாய்ச்சலாக அனுப்புங்கள் என்றார்.

  தலைமை அதிகாரிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள் ? Are you joking? என்கிறார்.


  இல்லை உண்மையாகவே சொல்கிறேன் என்னை நீங்கள் பார்சலாக அனுப்புங்கள் என்றார்.

  உங்களை எப்படி பார்சலாக அனுப்ப முடியும்? என்று அதிகாரி கேட்கிறார்.  உங்களுடைய அஞ்சலக விதிகளில், மனிதர்களை பார்சலாக அனுப்பக் கூடாது என்று சட்டம் இருக்கிறதா? இருந்தால் காட்டுங்கள் என்கிறார் எமிலி பேங்கர்ஸ்.

  உடனே அதிகாரி, சக அலுவலர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த பெண்மணி, தன்னைப் பார்சலாக பிரதமருக்கு அனுப்ப சொல்கிறார். அப்படி என்னை பார்சலாக அனுப்பா விட்டால் பத்தாயிரம் பெண்களை திரட்டி வந்து போராட்டம் நடத்தப் போவதாக கூறுகிறார். பார்த்தால் செய்யக்கூடியவராகத்தான் தெரிகிறது. என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தார்கள். 

  ஒருவழியாக எமிலி பேங்கர்ஸ் அம்மையாரை பார்சல் அனுப்பி வைக்கலாம் என்று முடிவிற்கு வந்தார்கள். அந்த அம்மையாரின் வலது கை மணிக்கட்டில் ஒரு அட்டையில் பிரதமர் அலுவலக முகவரியை எழுதிக் கட்டித் தொங்கவிட்டு, அவருடன் அஞ்சலக ஊழியரையும், பிரதமர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கே சென்று, பிரதமருக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது என்றார். என்ன பார்சல் என்று அலுவலகத்தில் கேட்கிறார்கள். இந்த அம்மையார் தான் அந்த பார்சல் என்கிறார் ஊழியர். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நீண்ட வாதத்திற்கு பின்னர் அந்த அம்மையார் பார்சலாக வந்திருக்கும் செய்தியை பிரதமருக்கு சொல்லப்பட்டது. எமிலி பேங்கர்ஸை அழைத்து வரும்படி பிரதமர் உத்தரவிடுகிறார். அங்கே சென்ற எமிலி பேங்கர்ஸ், பெண்களுக்கான வாக்குரிமை வேண்டும் என்று வலியுறுத்துகிறார். நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்தார். அதன் பின்னரும் நீண்ட நெடிய போராட்டங்கள் நடை பெற்றது. பெண்கள் மீது அடக்குமுறை, சித்ரவதை என்று பல்வேறு மோசமான நிகழ்வுகளும் நிகழ்ந்தது. அதன் விளைவாக 1918 ம் ஆண்டு 30 வயது நிறைவடைந்த பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. மேலும் 10 ஆண்டுகள் தொடர் போராட்டம் நடத்தி 1928 ம் ஆண்டு 21 வயது நிறைந்த பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. இப்படி போராடி தான் பெண்கள் தங்களுக்கான வாக்குரிமையை பெற்றார்கள் என்பதை இன்றைய பெண்களுக்கு புரிய வைக்க வேண்டும்.


  அறிவுடை நம்பி

  சங்கராபுரம்


  கேள்வி: அய்யா, வாழ்க்கை என்றால் என்ன? 


  என்.கே.மூர்த்தி: மனிதன் நிறைய விஷியங்களை கண்டு பிடித்து விட்டான். செவ்வாய் கிரகத்தில் எப்படி குடியேறுவது என்பது வரை மனிதனின் அறிவு திறன் வளர்ந்து இருக்கிறது. ஆனால் எப்படி வாழ்வது என்பது மட்டும் அவனால் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை. 


  நம் அருகில் உள்ள பொருட்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு, நம் அருகில் உள்ள மனிதர்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு, இந்த சமூகத்திற்கும் நமக்கும் உள்ள தொடர்பு, நமக்கு நம்மீதுள்ள தொடர்பு மற்றும் நம்மீது திணிக்கப்பட்டுள்ள கருத்து, திணிக்கப்படுகின்ற கருத்து என்று "கருத்தின்" மீதுள்ள தொடர்பு இவை அனைத்தும் சேர்த்து அவற்றோடு நாம் எப்படி சேர்ந்து இயங்குகிறோம் என்பதுதான் வாழ்க்கை.  செல்வகுமார் -- திருமுல்லைவாயல் 


  கேள்வி: சசிகலாவின் விடுதலை யாருக்கு லாபம்?  என்.கே.மூர்த்தி: சசிகலாவிற்கு கூட லாபம் இருக்கும் என்று நான் கருதவில்லை.


  ஓபிஎஸ் -- இபிஎஸ் தலைமையில் இயங்கும் அ.தி.மு.க. முக்கால் வாசி பா.ஜ.க. கட்டுப்பாட்டின் கீழ் போய்விட்டது. அதனால் சசிகலா வெளியே வந்து அந்த கட்சியை மீட்க முடியும் என்பது கேள்விக்குறியே. பாஜகவுடன் சசிகலா கை கோர்த்தால் அதிமுக வை காப்பாற்ற முடியும் என்கிற நிலையிலும் சிந்திக்க முடியவில்லை. காரணம் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவை சிறைக்கு அனுப்பியவர்களே பாஜகவினர் தான். அதனால் சசிகலாவின் விடுதலை அவருக்கே பெரிய லாபத்தை கொடுக்காது.  சுரேஷ்- ஆவடி

  கேள்வி: அ.தி.மு.க. வில் ஒருவழியாக முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டார்கள். அதைப்பற்றி கருத்து கூற முடியுமா?


  என்.கே.மூர்த்தி:  இதுவரை அவர்களால் தமிழக மக்கள் அடைந்த பயன்களை தெரிந்துக் கொண்டோம் என்றால், இதற்கு மேல் என்ன லாபம் ஏற்பட போகிறது என்பதை நேர்மையுடன் ஆய்வு செய்யலாம். நாம் இப்பொழுது அந்த கட்சி உயர்ந்தது இந்த தாழ்ந்தது என்று பாகுபாடு பார்க்காமல் ஆய்வு செய்வோம். நீங்கள் எழுப்பிய கேள்விக்கு மட்டுமே நாம் ஆய்வு செய்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.   மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் அண்ணாவின் பெயரில் தொடங்கப்பட்ட மாபெரும் கட்சி அ.இ.அ.தி.மு.க. என்பது தெரிந்ததே. அவர் உயிருடன் இருக்கும் போது அந்த கட்சி செயல்பட்டு வந்த நோக்கம் சில குறைபாடுகள் இருந்தாலும் தமிழர் நலன் சார்ந்தே இருந்தது. அவர் மறைந்த பின்னர் நடந்த நிகழ்வுகளை கொஞ்சம் உங்கள் மனக்கண்ணில் கொண்டு வாருங்கள்.

  ஜானகி--ஜெயலலிதா  என்று இரண்டு அணிகளாக பிரிந்து அரசியல் நாடகத்தை தொடங்கினார்கள். அதன் பின்னர் கட்சியின் நலன் கருதி ஜானகி அம்மாள் ஒதுங்கிக் கொண்டார். அப்போது சேவல் சின்னத்தில் நின்ற ஜெயலலிதா அணி 26 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று எதிர் கட்சி வரிசையில் அமர்ந்தார் என்பது நினைவிருக்கலாம். அப்பொழுது அவர் அரங்கேற்றிய அரசியல் நாடகம், பொது வாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் என்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி, பின்னர் அந்த அறிக்கையை திரும்ப பெற்றுக் கொண்டார். சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த போது, அதனை பிடுங்கி கிழித்தார். சட்டமன்ற மரபுகளை கேள்விக்குறியாக்கினார். ஆட்சிக்கு வந்ததும் சுதாகரன் என்ற வளர்ப்பு மகனை தத்தெடுத்து, ஆடம்பரமான திருமணம் செய்து வைத்து அமர்களப் படுத்தினார். பின்னர் அவர் வளர்ப்பு மகனே இல்லை என்று அறிக்கை விட்டார். அப்போது எழுந்து நிற்கவே முடியாத என்பது வயது மதிக்கத்தக்க ஆளுநர் சென்னா ரெட்டியின் மீது அவதூறு பரப்பியது வரை அனைத்தையும் உங்கள் நினைவலையில் கொண்டுவாருங்கள். அதனை தொடர்ந்து ஜெயலலிதா சொத்து சேர்த்தது, நீதிமன்றத்தை சந்தித்தது, தண்டனை பெற்றது. தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா படத்திற்கு மாநிலம் முழுவதும் அவமரியாதை செய்தது வரை உங்கள் ஞாபகத்தில் கொண்டு வாருங்கள். அதன் பின்னர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது, உயிரோடு இருப்பதாகவும், இட்லி சாப்பிட்டார் என்றும், அம்மா என்னோடு பேசினார் என்றும், அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்தது, தேர்தல் ஆணையத்திற்கு அவர் கையெழுத்திட்டு கடிதம் கொடுத்தது(அது போலியான கையெழுத்து என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது விட்டது) என்று வரிசையாக நினைத்து பாருங்கள்.   அவர் மறைந்தார் என்று அறிவிப்பதற்கு முன்பு, கண்ணீரும் கைக்குட்டையுமாக ஓபிஎஸ் தலைமையில் அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டது,  அதன் பின்னர் அந்த கட்சியின் பொது செயலாளர் பதவியை சசிகலா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி சின்னம்மா விடம் வரிசையாக நின்று காலில் விழுந்தது. கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்தது, ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியது,  அதனை தொடர்ந்து சசிகலாவும் அதே சமாதியில் மூன்று முறை அடித்து சத்தியம் செய்தது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனை வேட்பாளராக நிறுத்தி பிரச்சாரம் செய்தது. பின்னர் அவரையும் ஏமாற்றி வெளியேற்றியது   என்று வரிசையாக நாடகத்தை மட்டுமே அரங்கேற்றி வருகிறார்கள். அதன் தொடர்ச்சிதான்  கடந்த சில வாரங்களாக ஓபிஎஸ்-- இபிஎஸ் இருவரும் சேர்ந்து நடத்திய நாடகமும்.   நமது மக்கள் சினிமா, நாடகங்களை பார்த்து பார்த்து பழகியவர்கள். அதில் ஒன்றுதான் இந்த நாடகமும் என்று பார்க்க தொடங்கிவிட்டார்கள் என்றே முடிவுக்கு வரவேண்டும்.  அ.தி.மு.க. என்றாலே  சிறந்த நாடகக் கம்பெனி என்று மக்கள் பேசத் தொடங்கி இருப்பதையும் அறிந்திருப்பீர்கள்.

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad