Header Ads

  • சற்று முன்

    ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் அழிந்துவிடுமா?? அரசின் செயலுக்கு டாக்டர்கள் சங்கம் வரவேற்பு...

     


    கொரோனா பாதிப்பை விட, அதற்கு சொல்லப்படும் வைத்தியங்களும், அதை வைத்து செய்யப்படும் வியாபாரங்களும் அதிகரித்து வருகிறது. அதில் ஒன்றாக ஆவி பிடித்தல் எனப்படும் நீராவி நுகர்தலால் கொரோனா வைரஸ் அழிக்கப்படும் என்பதுதான். அவி பிடித்தல் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அதனை பொது இடத்தில் கூட்டமாக கூடி செய்யும்போது அதுவே நோய் பரவ காரணமாகி விடுகிறது.  

    'இந்நிலையில் 'கொரோனா கிருமிகளைக் கொல்லும் எனப் பொது இடங்களில் மொத்தமாக நீராவி நுகர்தல் சிகிச்சை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா கிருமி அழியாது, மாறாக நோய் பரவலுக்கே வழிவகுக்கும். இதை யாரும் பின்பற்றக் கூடாது, மருத்துவர்கள் ஆலோசனை இன்றி வாட்ஸ் அப், வலைதளங்களில் வரும் சிகிச்சைகளைத் தாமாக யாரும் பின்பற்றக் கூடாது'' என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வேண்டுகோளாக வைத்திருந்தார்.


    இதனை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.. இதுகுறுத்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில்: 

    ”தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவாமல் தடுத்தல், கரோனாவிலிருந்து காத்துக் கொள்ளல், கொரோனாவிலிருந்து குணமாக கொரோனா வைரஸைக் கொல்லுதல் என்ற பெயரில் நீராவி நுகர்தல் சிகிச்சை முறை பரவி வந்தது. 

    இந்த மருத்துவ முறை அறிவியல் அடிப்படையற்றது. நீராவி நுகர்தல் சிகிச்சை முறை கொரோனா பரவலையோ அல்லது கொரோனா வைரஸைக் கொல்லவோ பயன்படாது. மாறாக இது கொரோனா வைரஸ் பலருக்கும் மிக வேகமாகப் பரவும் வாய்ப்பையே ஏற்படுத்தும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கூறிவந்தது.

    இத்தகைய அறிவியல் பூர்வமற்ற முறைகளைக் கைவிட வேண்டும் என்றும் கோரி வந்தது. இந்நிலையில் தமிழக அரசு இத்தகைய மருத்துவ முறை கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், மருத்துவர்களின் ஆலோசனை இன்றி, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பி, சுயமாக சிகிச்சைகளைப் பொதுமக்கள் மேற்கொள்ளக் கூடாது என்ற அறிவுறுத்தலையும் வெளியிட்டுள்ளது. இதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மனமார வரவேற்கிறது. பாராட்டுகிறது.

    கொரோனாவைத் தடுப்பதற்கும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி காப்பதற்கும் அறிவியல் பூர்வமாக நிரூபணமான மருத்துவ நடைமுறைகளே உதவிகரமாக இருக்கும். இதை உலக நல நிறுவனம் வலியுறுத்திக் கூறிவருகிறது. எனவே, தமிழக அரசு, அறிவியல் ரீதியான நிரூபணமான மருத்துவ முறைகளை மட்டுமே ஊக்கப்படுத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பொதுமக்கள் நலன் கருதி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad