Header Ads

  • சற்று முன்

    மின்சாரவாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்....

     


    தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ராஜேஷ் லக்கானியை நியமிக்க  தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார் என்றும்  இந்தப் பொறுப்பில் ஏற்கெனவே பணியாற்றி வந்த பங்கஜ் குமார் பன்சாலுக்குப் பதிலாக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்'' என்றும் தெரிவித்துள்ளார்.


    ஏற்கனவே தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி, பின்னர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறைக்கு கடந்த ஆண்டு 2020-ல் மாற்றப்பட்டார்.

    இந்நிலையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad