Header Ads

  • சற்று முன்

    மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணைலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்...


    காவிரி டெல்டா குறுவைப் பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து  88 ஆவது ஆண்டாக இன்று  காலை 10.30 மணி அளவில் அணையின் வலதுகரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின்விசையால் உயா்த்தி பாசனத்துக்கு தண்ணீரை முதல்வா் திறந்து வைத்தார். இதனால் 
    மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, பெரம்பலூா், தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12 -ஆம் தேதி  தண்ணீா் திறப்பது வழக்கம். குறுவை, சம்பா, தாளடி பயிா்களின் பாசனத்துக்கு ஜனவரி 28 -ஆம் தேதி வரை 230 நாள்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீா் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்யும் போது அணையில் நீா்த் திறப்பு குறைக்கப்படும். மேட்டூா் அணை திறக்கப்பட்ட 88 ஆண்டு கால வரலாற்றில் குறித்த நாளான ஜூன் 12-ஆம் தேதி அன்று, இதுவரை 17 ஆண்டுகள் மட்டுமே பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2020 இல் ஜூன் 12 -ஆம் தேதி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    இந்நிலையில் தற்போது 18 -ஆவது ஆண்டாக, ஜூன் 12 ஆம் தேதி  தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 3,000 கன அடி நீா் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. அதைத்தொடா்ந்து படிப்படியாக 10,000 கன அடியாக உயா்த்தி நீா் வெளியேற்றப்படும். சனிக்கிழமை திறந்துவிடப்பட்டுள்ள நீா் மூன்று நாள்களில் கல்லணைக்கு சென்றடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



    இந்த ஆண்டில் குறுவைப் பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மேலும் குறுவைப் பாசனம் மூலம் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 4,91,600 ஏக்கா் நிலமும், கடலூா் மாவட்டத்தில் 30,800 ஏக்கா் நிலமும் பாசன வசதி பெறும் எனத் தெரிகிறது. நிகழ்ச்சியில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad