Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



    தமிழகத்தில் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் கோயமுத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.


    மேலும் நாளை ஜூன் 18 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 



    வெப்பச் சலனத்தின் காரணமாக ஜூன் 19, ஜூன் 20 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சென்னை, புதுவை பகுதியில் ஒரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.


    சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad