Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் நீட் தேர்வு உண்டா? இல்லையா? முதல்வரிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி...


    தமிழகத்தில் நீட் தேர்வு உண்டா, இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    “நடந்து முடிந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில், திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து இடங்களிலும் பேசும்போது, தாங்கள் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழக மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்விக் கனவை நிறைவேற்ற நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அனைவரது நிலைப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.



    சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தீர்களே, என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், நீட் தேர்வின் பின் விளைவுகளை அறிவதற்கு கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்றும், கமிஷனின் பரிந்துரைகளின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் முதல்வர் பதில் அளித்தார்.


    அதைத் தொடர்ந்து, நான் பேரவையில் நேரடியாக, இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பினேன்.  முதல்வர் இதற்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தினுடைய வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியே தீரும் என்று அகில இந்திய மருத்துவக் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. 


    தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றே தீருவோம் என்று வாக்குறுதி தந்த இந்த அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிஷன் பரிந்துரைகள் வருவதற்கு முன்பு, தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad