Header Ads

  • சற்று முன்

    ”ரஜினி மக்கள் மன்றம் இனி இல்லை, அரசியலில் ஈடுபடும் எண்ணமும் இல்லை” - நடிகர் ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு...

     


     

    ரஜினி அரசியலுக்கு வருவாரா?? மாட்டாரா?? என்ற கேள்வியை அனைவரும் எழுப்பி வந்த நிலையில் ,  தான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என, 2017, டிச. 31 அன்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால், கட்சி ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ரஜினிகாந்த், 2020, டிச. 31 அன்று தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக கூறினார். ஆனால், தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என கடந்த ஜன. 11 அன்று திட்டவட்டமாக அறிவித்தார்.

    இதையடுத்து, சிவா இயக்கும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.  சமீபத்தில் அமெரிக்கா சென்று மருத்துவப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். தொடர்ந்து சைலண்டாக இருந்து வந்த ரஜினிகாந்த் , இன்று (ஜூலை 12) அவர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக செய்தி வெளியானது.

    அதன்படி, இன்று காலை போயஸ்கார்டனில் உள்ள தன் இல்லத்திலிருந்து அவர் நிர்வாகிகளை சந்திக்கப் புறப்பட்டார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தார். 

    இந்நிலையில் தற்போது, ”எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

     நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.

    காலச் சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப் பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள்... வளர்க தமிழ்நாடு... ஜெய்ஹிந்த்... அன்புடன் ரஜினிகாந்த்... “ என்று குறிப்பிட்டுள்ளார். 


     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad