Header Ads

  • சற்று முன்

    காஞ்சிபுரத்தில் மின்சாரம் தாக்கி மாடு உயிரிழந்த சம்பவம்....


    தென்மேற்கு பருவ மழை தொடங்க இருப்பதால் தமிழகத்தில் ஒரு பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் உள்ளிட்டவற்றை முறையாக பராமரிக்காத காரணத்தினால், ஆங்காங்கே மின் கம்பங்கள் மற்றும் மின் ஒயர்கள் சேதமடைந்து காணப்படுகின்றன, மேலும் பூமிக்கு அடியில் இருந்து மின் கம்பங்களுக்கு செல்லும் ஒயர்கள் முறையாக பராமரிப்பு செய்யாத காரணத்தினால் அவையும் பழுதடைந்து காணப்படுகிறது. காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதிகளில் மாடுகளை வளர்க்கும் சிலர் தங்களுடைய மாடுகளை, பஜார் உள்ளிட்ட இடங்களில் வீணாகும் காய்கறி பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சாப்பிடுவதற்காக அவிழ்த்து விட்டு விடுகிறார்கள்.

    இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே உள்ள சாலை தெருவில் இவ்வாறு பழுதடைந்த மின் கம்பத்தில் மாடு மின்சாரம் தாக்கி உயிர் இழக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



    அந்த சிசிடிவி காட்சியில், ஒரு வீட்டின் அருகே மாடு சென்று நிற்கிறது, அந்த மாட்டினை அந்த வீட்டின் உரிமையாளர் அடித்து துரத்துகிறார். இதனைத் தொடர்ந்து அந்த மாடு அங்கிருந்து செல்ல மறுக்கிறது, இருந்தும் மீண்டும் அடித்து துரத்தும்பொழுது அங்கிருந்து செல்லும் மாடு, அருகில் இருக்கும் மின்கம்பத்தை நோக்கி செல்லும்பொழுது மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் கவனக்குறைவால் மனிதர்கள் யாராவது சென்றிருந்தால், மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தியிருக்கும், நகரின் பல்வேறு பகுதிகளில் இதே பிரச்சினை இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad