Header Ads

  • சற்று முன்

    தாலிபன் தாக்குதலில் இந்திய புகைப்படக் கலைஞர் பலி...


     
    ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்றுவந்த  தாலிபன் தாக்குதலில் இந்திய புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திகி கொல்லப்பட்டார். மும்பையைச் சேர்ந்த இவர்,  பிரபல ராய்டர்ஸ் பத்திரிக்கையின் இந்திய நிறுவனத்தில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு, மியான்மரின் ரோஹிஞ்சா சமூகத்தினர் எதிர்கொண்ட வன்முறையை புகைப்பட ஆவணம் செய்ததற்காக, இவருக்கு புலிட்சர் விருதும் வழங்கப்பட்டது.. 
     

     

    கொரோனா இரண்டாம் அலையின்போது டெல்லி மைதானத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டது, டெல்லி கலவரம், பொதுமுடக்கத்தின் போது  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியது போன்று இவர் எடுத்த புகைப்படங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது..  



    புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான இவர், ஆஃப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபன் தாக்குதல் குறித்த புகைப்படங்களை எடுக்கச் சென்ற குழுவில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை(நேற்று) இரவு தாலிபன் தாக்குதலின் போது, டேனிஷ் சித்திகி, கொல்லப்பட்டதாக தெரிகிறது. ராய்டர்ஸ் நிறுவனமும் இதனை உறுதி செய்திருக்கிறது. 

     ஆஃப்கனின் கந்தகர் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் சென்று, தாக்குதலை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, தாலிபன்களில் தாக்குதலில் டேனிஷ் பலியாகியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு, டேனிஷ் தனது சுட்டுரைப் பக்கத்தில் தாலிபன் தாக்குதலில் இருந்து உயிர் தப்பித்துள்ளேன் என்று பதிவு செய்திருந்தார். மேலும் 15 மணி நேர வேலைக்குப்பின், 15 நிமிட ஓய்வில் எடுத்த படம் என்று புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அவரது இழப்பு பத்திரிக்கையாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad