Header Ads

 • சற்று முன்

  கலைஞர் ஒர் சகாப்தம்...

   

   மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், பின்னர் மறைந்தும் விடுகிறார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே இந்த சமூகத்தை முரண்பட்ட கோணத்தில் பார்க்கிறார்கள். அதன்படியே சிந்திக்கின்றனர். இந்த சமூகம் கொஞ்சமாவது மாறியிருக்கிறது என்றால், அந்த முரண்பட்ட மனிதர்களால் மட்டுமே என்றார், மாபெரும் சிந்தனைவாதி பெர்னாட்ஷா. அப்படிப்பட்ட  முரண்பட்ட மனிதர்களில் ஒருவர்தான் கலைஞர்.

      நாகப்பட்டினம் மாவட்டம் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் முத்துவேல் - அஞ்சுகம் தம்பதிக்கு 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி பிறந்த தட்சிணாமூர்த்தி தான் இன்று உலகம் போற்றும் கருணாநிதி.

    சிறுவயதில் கவிதை, நாடகம், இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட கலைஞர் - அப்போது நீதிக்கட்சியின் தூணாக இருந்த அழகர்சாமியின் மேடைப்பேச்சால் ஈர்க்கப்பட்டு 13, 14 வயதிலேயே இயக்கப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அப்போதிலிருந்து, தன்னுடைய கடைசி காலம் வரை இந்த தமிழ் சமூகத்திற்காக தொடர்ந்து தன் எழுத்துகள் மூலமாகவும், மேடைப்பேச்சின் வாயிலாகவும் மிகக் கடுமையாக உழைத்தார். 

   

   கடந்த 50 ஆண்டுகாலமாக கலைஞரை பாராட்டியோ அல்லது விமர்சனம் செய்தோ,  அவரை சுற்றியேதான் தமிழக அரசியல் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இவர் முதல்வராக இருந்தாலும் அல்லது எதிர்க்கட்சியில்  இருந்தாலும் அவர் விடுக்கின்ற அறிக்கையை வைத்துகொண்டு, தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் ஒரு வார காலத்திற்கு விவாதம் செய்து கொண்டிருப்பார்கள். இன்றும் அவருடைய அறிக்கையில் உள்ள புள்ளி விபரங்களும், அதற்கான ஆதாரங்களும் அரசியலில்  ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஆவணங்களாக உள்ளன. 

  50 ஆண்டுகளுக்கும் மேல் சுமார் 1 கோடிக்கும் அதிகமான தொண்டர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கட்சியில் தொடர்ந்து தலைவராக இருந்தார்.

  13 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு  அனைத்திலும் வெற்றி.. 

  5 முறை முதலைச்சர் பதவியை அலங்கரித்த அனுபவம்.  இந்தியாவில்  கலைஞருக்கு ஈடான தலைவர் வேறொருவரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    வெற்றியும் தோல்வியும் கலந்தது தான் வாழ்க்கை என்பார்கள்., ஆனால் கலைஞர் அளவிற்கு அதிகமான தோல்விகளையும், சோதனைகளையும் சந்தித்தவர்கள் இல்லை என்றே கூறலாம். இயக்கம் தோல்வி அடைந்ததும், அதனை உடனே சரிசெய்து தொண்டர்களை உற்சாகப்படுத்தி அவர்களை வெற்றிப்  பாதையில் நடைபோட வைக்கின்ற ராஜதந்திரம் கலைஞரை தவிர வேறு தலைவர்களிடம் காண முடியாது. 

  அரசியல், இலக்கியம், சினிமா, மேடைப்பேச்சு, குடும்பம் என தான் கால் பதித்த அனைத்து துறைகளிலும் இன்னொரு நபர் நெருங்கக்கூட முடியாத அளவிற்கு சாதனை படைத்துள்ளார். 


    தந்தை பெரியாரை விட்டு விலகிய அறிஞர் அண்ணா, 1949ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். அன்றைய காலக்கட்டத்தில் கலைஞர் மட்டுமே பள்ளிப்படிப்பை தாண்டாதவர். மற்ற தலைவர்கள் அனைவரும் பட்டதாரிகள்.

    ஒரு மனிதனிடம் உழைப்பும் திறமையும் இருந்தால், அவன் அந்நாட்டின் மன்னனாகலாம் என்று கூறுவார்கள். அதே மனிதனிடம் உழைப்பு மட்டுமே இருந்து திறமை இல்லாவிட்டாலும், அவன் அந்நாட்டின் அமைச்சர் ஆகுவான் என்பார்கள். அப்படி பெரிய அளவில் பட்டப்படிப்பு இல்லாமல், உழைப்பையும் திறமையையும் மட்டுமே கொண்டு தமிழகத்தின் முதல்வரானவர் கலைஞர்.

    ’கண்ணம்மா’, ’மண்ணின் மைந்தன்’, ’பராசக்தி’, ’மனோஹரா’, ’மந்திரி குமாரி’  என 20க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். ‘பராசக்தி’ படத்தில்தான், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகம். அந்தப்படத்தில் கலைஞர் எழுதிய வசனங்களைப் பேசி பழகாத மாணவர்களே அன்றைய காலத்தில் கிடையாது என்று கூறலாம். ‘மனோகரா’ படம் வெளிவந்தபோது கலைஞரின் ஆற்றல் கிராமங்கள்தோறும் பரவியது. அவரது வசனம் திரைத்துறையில் திருப்புமுனையை உருவாக்கியது. சுருக்கமாகச் சொன்னால் தமிழ் சினிமா, கலைஞர் வசனத்திற்கு முன் பின் என மாறியது. 

    அதேபோல், மேடை நாடகங்கள் ’சிலப்பதிகாரம்’, ’மணிமகுடம’, ‘தூக்கு  மேடை’ என ஏராளமானவற்றை எழுதி குவித்து, தமிழர்களுக்கு  தன்மானத்தை ஊட்டிய அந்த சிந்தனைவாதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தினார். நடிகவேல் எம்.ஆர்.ராதா. அன்று முதற்கொண்டு கட்சித் தொண்டர்களால்  ‘கலைஞர்’ என்று அன்போடு அழைக்கப்படுகிறார். 

  குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா , சங்கத்தமிழ் என ஏராளமான இலக்கிய நூல்களையும் சிறு கதைகளையும் , நினைக்கவே மலைப்பாக இருக்கிற அளவிற்கு எழுதி குவித்திருக்கிறார். அரசியல் பணிகளுக்கு இடையே இவை அனைத்தையும் எழுதி சாதித்துக்காட்டியவர் கலைஞர் மட்டுமே. 


  திமுக  தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை, 3 முறை பெரும் பிளவை சந்தித்திருக்கிறது. முதலாவது அறிஞர் அண்ணா உயிரோடு இருந்த காலத்தில், 19.4.1961 ல் திமுகவில் இருந்து சம்பத் வெளியேறி தமிழ் தேசியக் கட்சியை தொடங்கினார். அதில் கவிஞர் கண்ணதாசன், பழ.நெடுமாறன் ஆகியோர் அக்கட்சியின் பிற தலைவர்கள்.  அப்போது கலைஞர், வழக்கமான உழைப்பை விட, பல மடங்கு அதிகமான உழைப்பையும், திறமையையும் வெளிப்படுத்தினார். இரவு பகல் பாராமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கழகத்தை வலுப்படுத்தினார்.

    அதேபோல்,  அறிஞர் அண்ணாவின் அயராத உழைப்பு, அழகான மேடைப்பேச்சு, ஆளுமைத்திறன் இவற்றிற்கு முன்னால் சம்பத்தின் அரசியல் எடுபடவில்லை. 1962 ல் நடந்த தேர்தலில், போட்டியிட்ட்ட அனைத்து தொகுதிகளிலும் சம்பத் தோல்வியை சந்தித்தார். அதன் பின்னர் அவரது தமிழ் தேசியக் கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார். அப்போது கட்சி காணாமல் போனது. 

  1967ல் நடந்த பொதுத்தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று அறிஞர் அண்ணா முதல்வரானார். கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சரானார். உழைப்பை மட்டுமே நம்பி போராடுகிறவன், எவ்வளவு பெரிய பதவியையும் சுலபமாக பெறமுடியும் என்பதற்கு கலைஞர் மட்டுமே முன்னுதாரணம். 


  1969ல் அண்ணா மறைவிற்குபின் கலைஞர் தமிழக முதலமைச்சரானார். 1972 ல் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகி, அதிமுக என்னும் தனிக்கட்சியை தொடங்கினார். அது திமுக சந்தித்த இரண்டாவது பிளவு. கட்சி கலைஞரின் கட்டுப்பாட்டிற்கு வந்த கொஞ்சம் நாளிலேயே, எம்ஜிஆர் வெளியேறியது பெரும் பிளவாக கருதப்பட்டது. அப்போது கலைஞரை தவிர வேறு யாராக இருந்தாலும், இந்த நெருக்கடியை சமாளித்திருக்க முடியாது. 

    1980ல் இந்திராவோடு கூட்டணி வைத்து, நேருவின் மகளே வருக..! நிலையான ஆட்சி தருக ..! என்றார். பின் அந்த தேர்தலில் திமுக பெரும் வெற்றியை பெற்றது. அதன்  மூலம்  கழகம் சந்தித்த 2ஆவது பிளவையும் சரிசெய்தார். 

   ஒரு இயக்கம் இக்கட்டான சூழலில் இருக்கும்போது, தலைமை பதவியில் இருந்து வழி நடத்துபவர்கள் மிக துணிச்சலாக சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்பார்கள். அந்த துணிவும், ஆற்றலும் கலைஞரிடம் நிறையவே இருந்தது. 

  அதேபோல், 1993ல் வைகோ தி.மு.க.வில் இருந்து வெளியேறுகிறார். அவருடன் 9 மாவட்டச் செயலாளர்களும் வெளியேறுகிறார்கள். கலைஞர் கொஞ்சமும் மனம் தளரவில்லை. இது திமுக சந்தித்த 3வது பிளவு. இனி திமுகவே கிடையாது என்று இன எதிரிகள் ஏளனம் பேசினர். அப்போதும் கலைஞரின் அரசியல் சாணக்கியத்தன்மை, தொண்டர்களுக்கு பகிரங்கமாக தெரியவந்தது. 


  3 ஆண்டுகளுக்குப் பின்னர் 1996 ல் தமிழக காங்கிரஸ் பிளவுபட்டு, மூப்பனார் தலைமையில்  ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ உதயமானது. அக்கட்சிகளோடு கூட்டணி வைத்தார் கலைஞர். திமுக- தமாகா கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி பிரச்சாரம் செய்தார். கலைஞர் மீண்டும் 4 வது முறையாக முதல்வரானார். இதனால் அடுத்த பிளவையும் சரிசெய்தார். அதன் பின்னர் வைகோவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது.
   

   07.08.2018 அன்று மறைந்த கலைஞரின் உடலை, அண்ணாவின் அருகில் அடக்கம் செய்யக்கூட அன்றைய , எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மறுத்துவிட்டது. அந்த செய்தியைக் கேட்டு நாடே சோகத்தில் மூழ்கியது. பின்னர்  நீதிமன்றத்தை அணுகி, கலைஞரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி பெறப்பட்டது. சாகும் வரை மக்களுக்காக போராடிய கலைஞர், மறைந்த பின்னரும் தனக்கான இடத்தை போராடியே பெற்றார் என்பதுதான் வரலாறு... 


   

    எத்தனை பிளவுகள், தோல்விகள், போராட்டங்களை  சந்தித்தாலும்,  மனம் தளராமல் அத்தனையையும் பாடமாகவும், படிக்கட்டுகளாகவும் மாற்றி வெற்றிபெற்றவர் கலைஞர். இந்திய அரசியல் வரலாற்றில், கலைஞருக்கு நிகரான சோதனைகளையும், தோல்விகளையும் சந்தித்த தலைவர் ஒருவரை பார்க்கவே முடியாது என்றே கூறலாம். கலைஞரை பொறுத்தவரையில் தோல்வி என்பது, தோல்வியல்ல... அது தள்ளிப்போடப்பட்ட வெற்றி.. அதேபோல் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை என்பது தமிழக அரசியல் வரலாற்றில் மிக ஆழமாக தடம் பதித்த வரலாறு என்பதே நிதர்சனமான உண்மை... 

  ஆசிரியர் :என்.கே.மூர்த்தி.


  No comments

  Post Top Ad

  Post Bottom Ad