Header Ads

  • சற்று முன்

    கல்வி பொது பட்டியலுக்கு மாற்றம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

     

    கல்வியைப் பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


    சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவும்,  அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியுமான டாக்டர் எழிலன், தாக்கல் செய்த மனுவில், கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான விதிமீறல் என்றும், இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டு  மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.  1976 ம் ஆண்டு மொத்தம் 5 முக்கியமான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதில் கல்வி முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

    மாநில அரசுகளின் அனுமதியின்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல் எமர்ஜென்சி காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது, இப்படி கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே தற்போது நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக்கொள்கை போன்ற சட்டங்கள் மத்திய அரசு மூலம் அமலுக்கு வந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்..

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப்பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, அரசியலமைப்பு சட்டத்திற்கு கூட்டாட்சி கட்டமைப்பிற்கு எதிராக கல்வி என்பது, மாநிலப் பட்டியலில் இருந்து மத்திய பட்டியலிற்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார். எஸ் ஆர் பொம்மை வழக்கில் கூட்டாட்சி கட்டமைப்பு தொடர்பாக முழுமையாக விளக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசையும் பிரதிவாதியாக சேர்க்க உத்தரவிட்டு, இதுகுறித்து ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு எட்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பத்துவாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad