Header Ads

  • சற்று முன்

    இந்தியாவில் குற்றங்கள் அதிகரிப்பு - தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கையின் அதிர்ச்சி


    கொரோனா பொதுமுடக்கத்தின் போது இந்தியாவில் 28% அளவுக்கு குற்றங்கள் அதிகரித்து உள்ளது  தேசிய குற்ற ஆவன காப்பகத்தின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குற்ற வழக்குகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, 2020 ஆண்டு கணக்கெடுப்பின்படி, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    தேசிய குற்ற ஆவண காப்பகமானது ஆண்டுதோறும், நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள அனைத்து குற்ற வழக்குகளையும் சேகரித்து, அவற்றை குற்றங்களின் தன்மை வாரியாக பிரித்து, புள்ளி விவரங்களுடன் அறிக்கை வெளியிடும்.


    அந்த வகையில், நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த வழக்குகளின் புள்ளி விவரங்களின்படி, கடந்த 2019ம் ஆண்டை விட, 2020ம் ஆண்டில் அனைத்து வகையான குற்ற சம்பவங்கள், 14.45 லட்சத்திற்கும் மேல், அதாவது 28 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற, அதிர்ச்சி தகவலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

    இவற்றில், கொலை வழக்குகள், 2019ம் ஆண்டை விட 2020ம் ஆண்டு  ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், 2019ம் ஆண்டை விட 2020ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 5.8 சதவீதம் குறைந்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் 4.3 சதவீதம் குறைந்தும் பதிவாகி ஆறுதலை அளிக்கிறது.

    ஆனால், பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் என்பது, கடந்த 2019ம் ஆண்டை விட, 2020ம் ஆண்டில் 9.4 சதவீம் அதிகரித்து 50,291 வழக்குகளும், பழங்குடியினர் என்று அழைக்கப்படும் மலைவாழ் மக்கள் மீதான தாக்குதலும் 9.3 சதவீதம் என 2020ம் ஆண்டு 8,272 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், சைபர் கிரைம் எனப்படும் இணையவழி குற்ற சம்பவங்கள் கடந்த 2019ம் ஆண்டை விட 2020ம் ஆண்டு 11.8 சதவீதம் அதிகரித்து 50,035 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    கொரோனா பரவல் காரணமாக உலகளாவிய ஊரடங்கு காரணமாக அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்டதால், வெளிநாட்டு பயணிகளின் வரத்து இல்லாமல் போனதைத் தொடர்ந்து, வெளிநாட்டினருக்கு எதிரான குற்ற சம்பவங்களானது, கடந்த 2019ம் ஆண்டை விட, 2020 ம் ஆண்டு 191 வழக்குகள் மட்டுமே பதிவாகி 52.7 சதவீதம் குறைந்துள்ளது.

    ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என நாடு முழுவதும் காணமால் போனவர்கள் என வழக்குகள் பதிவாகி உள்ளதன் கணக்கெடுப்பின்படி, கடந்த 2019 ம் ஆண்டை விட, 2020ம் ஆண்டு 19.8 சதவீதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட வேலையின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகள் கடந்த 2019ம் ஆண்டை விட 2020ம் ஆண்டு 190.5 சதவீதம் அதிகரித்து, 92 கோடியே, 17 லட்சத்து, 80 ஆயிரத்து, 480 ரூபாய் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம், புள்ளி விவரங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad