Header Ads

  • சற்று முன்

    கோவை மாணவியின் உடல் - 3 நாட்களுக்குப் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைப்பு...

     

     

    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கோவை மாணவியின் உடல் 3 நாட்களுக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மிதுன் சக்ரவர்த்தி. இவர் கோவை மாணவிக்கு பல நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மிதுனின் தொல்லை தாங்காமல் மாணவி வேறு பள்ளிக்குச் சென்றுள்ளார். இருந்தபோதிலும் அவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவுகள் கொடுத்து வந்துள்ளார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி, கடந்த வியாழன் அன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட 3 பேரின் பெயரைக் குறிப்பிட்டு ”யாரையும் சும்மா விடக்கூடாது” என கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டார்.

    மேலும், பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்ஸனிடம் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஏற்கனவே புகார் அளித்திருக்கிறார். ஆனால் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே அவரும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதற்கிடையே பள்ளி முதல்வர் மீரா ஜாக்ஸன் தலைமறைவானார். அவரை 2 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர்.

    மீரா ஜாக்ஸனை கைது செய்யக்கோரி, கடந்த 2 நாட்களாக மாணவியின் உடலை வாங்க மறுத்து  உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பெங்களூருவில் பதுங்கியிருந்த மீரா ஜாக்ஸனை இன்று காலை காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடல் 3 நாட்களுக்குப் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படட்து.

     
     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad