Header Ads

  • சற்று முன்

    தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதில்சொல்லி தரத்தை குறைத்துக்கொள்ளாதீர்கள்.. - ரசிகர்களுக்கு வேண்டுகோள்..


     


    இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ‘ஜெய்பீம்’. நீதியரசர் சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் படும் இன்னல்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

    கலைஞர்கள், ரசிகர்கள் என அனைவரும் ‘ஜெய்பீம்’ படத்தைக் கொண்டாடி வரும் சூழலில், பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் எதிர்ப்புத் தெரிவிக்க தொடங்கினர். நிஜத்தில் எஸ்.ஐ கேரக்டரில் வருபவரின் பெயர் அந்தோணி சாமி.  ஆனால் படத்தில் அவரின் பெயர் குருமூர்த்தி என சித்தரிக்கப்பட்டிருப்பதும், அவரது வீட்டுக் காலண்டரில் அக்னி கலசம் இருந்ததும் தங்களது சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

     

    அதுபோக, அன்புமணி ராமதாஸ், சூர்யாவுக்கு  மறைமுக மிரட்டல் விடுக்கும் தொனியில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு நடிகர் சூர்யாவும், ‘ஜெய்பீம்’ படத்தை ஒரு கட்சிக்குள் சுருக்க வேண்டாம் என பதிலடி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, சூர்யாவை தாக்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரசிகர்கள், #WeStandWithSurya என்ற ஹேஷ்டேகை பதிவிட்டு ட்விட்டரில் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா நற்பணி மன்றம் சார்பில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 


     

    “ ஜெய்பீம் திரைப்படம் அதிகாரத்துக்கு எதிரான போர்க்குரலாக ஒலிக்கிறது. படத்துக்கு எதிரான கருத்துக்களை ஒருசிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். சூர்யா அண்ணனுக்கு எதிரான இதுபோன்ற நியாயமற்ற விஷயங்களை இந்த சமூகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

    அதனால் நாம் எப்போதும்போல் பொறுமையாக இருப்பது தான் சிறப்பு. எனவே சூர்யா ரசிகர்கள் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை குறைத்துக்கொள்ள வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad