Header Ads

  • சற்று முன்

    நாட்டு வெடியால் பறிபோன சிறுவனின் கண் பார்வை…

     



    சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இறுதி ஊர்வலத்தின் போது வெடிக்கப்பட்ட நாட்டு வெடியால் 14 வயது சிறுவனின் பார்வை பறிபோயுள்ளது.

    எம்.ஜி.ஆர் நகர் பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த சந்தோஷ் எனும் சிறுவன், கல்லூரி சென்றிருந்த தன் அக்காவை அழைத்து வருவதற்காக  பச்சையப்பன் சந்திப்பு பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது தாயாரின் இறுதி ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது. ஊர்வலத்தின்போது அதிக ஒலி எழுப்பும், தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகளை வெடித்துள்ளனர். நாட்டு வெடியிலிருந்து சிதறிய துரும்பு ஒன்று, சாலையோரம் நின்றிருந்த சிறுவன் சந்தோஷின் இடது கண்ணில் தாக்கியதாக தெரிகிறது.  வலியால் அலறித் துடித்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    சந்தோஷை பரிசோதித்த மருத்துவர்கள், பார்வை பறிபோனதாக தெரிவித்துள்ளனர். பார்வை நரம்பு சிதைந்துவிட்டதாகவும், மாற்று கண் பொருத்தினாலும் பார்வை திரும்பப்பெற முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் குணசேகரன், சண்முகவேல், செல்வக்குமார் ஆகிய 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஒரு சிலரின் அலட்சியமே சிறுவனின் பார்வை பறிபோனதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  இதுபோன்று இறுதி ஊர்வலங்களில் தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகளை வெடிப்பது பரவலாக நடைபெற்று வருவதாகவும், காவல் துறையினர் கண்காணிப்பை ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad