Header Ads

  • சற்று முன்

    கள்ளக்குறிச்சியில் 11 மாத குழந்தை, தாய் மர்மமான முறையில் உயிரிழப்பு..

     

    Representative image

    கள்ளக்குறிச்சியில் 11 மாதக் குழந்தையும், தாயும் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர் பேட்டையச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆஷா என்பவரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கவியாழினி என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது.  வினோத்குமார் திருப்பூரில் கூலி வேலை செய்துவரும் நிலையில், கணவர் வீட்டில் வசித்து வந்த ஆஷா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். 

    இந்நிலையில் வினோத்குமார், நேற்று முன்தினம்   ஆஷாவுக்கு நீண்ட நேரமாக  போன் செய்தும் அவர் எடுக்காமல் இருந்துள்ளார். இதனால் வினோத்குமார் அருகிலுள்ள உறவினர்களுக்கு ஃபோன் செய்து கேட்டிருக்கிறார். அவர்கள் ஆஷாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார். தரையில் ஆஷாவின் 11 மாதக் குழந்தையும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளது. 

      

    ஆஷாவின் தாயார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு  வந்த காவல் துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    விசாரணையில், குழந்தை கவியாழினிக்கு கடந்த சில நாட்களாக  உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அஷா, கணவர் வினோத்குமாரை உடனே புறப்பட்டு ஊருக்கு வரச்சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் வரவில்லை என்பதால் ஆஷா மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் உடல் நலக்குறைவால் குழந்தை இறந்திருக்கலாம் என்றும், அதனால் மனமுடைந்து ஆஷா தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது.

     இருப்பினும் ஆஷா மற்றும் குழந்தை கவியாழினியின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad