Header Ads

 • சற்று முன்

  நேரடி தேர்தலா? மறைமுக தேர்தலா? - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குழப்பம்...
  தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 152  நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர்  மாதமே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்த்த  சூழலில், பிப்ரவரியில் நடக்க  இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பெரிய அளவிலான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை என்றாலும், ஆளும் கட்சியின் செயல்பாடுகளுக்கு மக்களின் ஆதரவு இருக்கிறதா? இல்லையாஎன்பது தெரிந்துவிடும்..

   

  தேர்தல் நெருங்கி வரும் இந்தச் சூழலில், பல்வேறு அரசியல் கட்சிககளைச்  சேர்ந்த தலைவர்கள் மற்றும் சில அமைச்சர்களின்  பேச்சுக்களும் செயல்பாடுகளும்  நம்மை சிரிப்பில் ஆழ்த்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தேர்தல் களம்  அந்தக் கட்சி தலைவர்களுக்கும், ஆளும் அமைச்சர்களுக்கும் பாடங்கள் கற்றுக் கொடுக்கும். உதாரணமாக பொதுக்கூட்ட மேடையில் செருப்பை காட்டிய  நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர்  சீமானின் செயல்பாட்டினால் அவருடைய ஓட்டு வங்கி கூடுமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல் இந்தத் தேர்தலில் பா.ம.க.வின் நிலையையும் கூர்ந்து கவனிக்க வேண்டியதாக உள்ளது. 


   

  இந்தத் தேர்தலைக் குறிவைத்து சில அமைச்சர்கள் செய்யும்  வேலைகளையும் அப்படியே பார்க்க வேண்டும்..  தங்கள் வாரிசுகளை மேயர் பதவியில் உக்காரவைக்க, உதயநிதி ஸ்டாலினை  துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். தலைமை வாரிசுக்கு இடம் கொடுத்தால், ’அரசர் எவ்வழியோ..!! அமைச்சர்களும் அவ்வழியே..!! பின்பற்றிவிடலாம் என்கிற எண்ணம் தான்..

  இந்த 6 மாதங்களில் முதலமைச்சர்  ஸ்டாலினின் செயல்பாடுகள் பாராட்டும்படியாக இருந்தாலும், அதுவே நகர்ப்புற உள்ளாட்சியில் ஓட்டா மாறுமா என்பது கேள்விக்குறியே..!! அப்படி ஒருவேளை அ.தி.மு.க.விற்கு சாதகமான சூழல் அமைந்தால் அமைச்சர்களின் நிலை என்னவாகும் என்பதை பல கோணங்களில் யோசிக்க வேண்டியிருக்கிறது..   பொதுவாக உள்ளாட்சித் தேர்தல் முடிவு ஆளுங்கட்சிக்குத்தான் சாதகமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே..   ஆனால், இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தல் எத்தணை அமைச்சர்களின் பதவியை காலிசெய்யப் போகிறதோ?? கட்சித் தலைவர்களின் பதவிகள் பறிபோகப் போகிறதோ?? என்பதை கொஞ்சம் வெயிட் பண்ணிதான் பார்க்க வேண்டும்...  இந்த தேர்தல் குறித்த இப்போதைய ஹாட் டாப்பிக் என்னவென்றால் நேரடி தேர்தலா? மறைமுக தேர்தலா? என்பது தான்..

  அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மேயரா? அல்லது கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படும்  மேயரா? என்ற விவாதம் தான் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.  இது மிக முக்கியமானதாக  பார்க்கப்படும் கேள்வி.ஏனென்றால், நேரடி தேர்தலாக இருந்தால், மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளுருக்கு எத்தணை ஓட்டுகள் கிடைத்துள்ளன என்பது வெளிப்படையாக தெரிந்துவிடும்.  இதன் மூலம் ஆளும் கட்சியின் செயல்பாடுகளுக்கு மக்களின் எதிர்வினை என்ன என்பதும்  தெரியவரும். இதே மறைமுக தேர்தல் என்றால்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பெரிய பதவிகளில் இருந்தவர்கள்  கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்ப மாட்டார்கள். அதனால்  உள்ளூரில் யாருக்கு செல்வாக்கு என்பதை கணிக்க முடியாமல் போய்விடும்.. 

   

  இவற்றையெல்லாம் விட  முக்கியமாக பார்க்க வேண்டியது, ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தங்கள் வாரிசுகளை  மேயர்களாக்கவும், நகராட்சி தலைவர்களாகவும் ஆக்க வரிந்து கட்டிக்கொண்டு தயாராகி வருவதைத் தான்.. மறைமுகத் தேர்தல் என்றால், வாரிசுகளை அரியனை ஏற்றும் கனவு
  எளிதாகிவிடும்..
  நேரடித் தேர்தல் என்றால், தந்தை அமைச்சர் மகன் மேயரா என    வாரிசுகள் போட்டியிடடுவதை  தலைமை ஏற்றுக்கொள்ளாது... அப்படியே தலைமை ஒப்புக்கொண்டாலும், போட்டியிட்டாலும்  மக்களின் தீர்ப்பும் இதுவாகவே அமைந்துவிட வாய்ப்பிருக்கிறது. 

  மறுபுறம்  தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகவும் அமைந்துவிடலாம்.. இதனால்   நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தல் குறித்த  குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.  இந்தக் காரணங்களால் அரசியல் களத்தில் தற்போது நேரடி தேர்தலா? அல்லது மறைமுக தேர்தலா? என்கிற விவாதம் முக்கியத்துவம் பெறுகிறது.

   

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad