Header Ads

  • சற்று முன்

    ஊரடங்கு நேரத்தில் காவல் துறையினர் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும்... டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு...

     

    தமிழக டிஜிபி சைலேந்திரபாபு


     தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்களின் பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக,  அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.  இரவு  நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் கோயிகளில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட  கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. 

    அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு  நேற்று முதல் அமலுக்கு  வந்துள்ளது. இதனால் காவல் துறையினர் ஆங்காங்கே கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் காவல்துறையினர்  எப்படி நடந்துகொள்ள வேண்டும் மற்றும் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருக்கிறார். 

    ஊரடங்கு



    அதில், “இரவு நேர பொதுமுடக்கம் மற்றும் ஞாயிறு பொதுமுடக்கத்தின் போது அத்தியாவசிய பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர்கள், நீதித்துறை, வங்கிகள், போக்குவரத்து துறைகளில் வேலை பார்ப்பவர்களை அனுமதிக்க  வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     மேலும் அத்தியாவசிய தேவைகளான பால்,  மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து சேவைகள்,  ஏடிஎம் மையங்கள்,  சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்களில்  பணிபுரிவோரை  அடையாள அட்டையை பார்வையிட்டு உடனடியாக அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அடையாள அட்டை


    அதேபோல் ஜனவரி 9ஆம் தேதி முழு ஊரடங்கின்போது,   உணவு டெலிவரி செய்யும்  பணியாளர்களை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கலாம் என்றும், விவசாய பணிக்காக  செல்பவர்கள்,  அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர்,  பணி முடிந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோரை அனுமதிக்கலாம்  என்று கூறப்பட்டுள்ளது.

    விவசாய விளை பொருட்கள், காய்கறி,  பழங்கள்,  கறிக்கோழிகள்,  முட்டை போன்றவற்றை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது என்றும்,  உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் ஐடி நிறுவனங்களில் பணி புரிபவர்களை அடையாள அட்டையைக் காண்பித்து அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    காய்கறிகள்

    தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புக்காக நேர்முகத்தேர்வுகளுக்குச் செல்பவர்கள் அழைப்புக் கடிதத்தைக் காட்டினால் அனுமதிக்க வேண்டும், வாகனங்களை சோதனை செய்ய வேண்டியிருந்தால் கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும், மேலும் வாகனங்களை வெளிச்சமான இடங்களில் வைத்துதான் சோதனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

     மேலும் வாகனச் சோதனையின் போது  காவல் துறையினர், வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும்  நடந்து கொள்ள வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad