Header Ads

  • சற்று முன்

    ''திமுக ஆட்சியில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி''...அதிமுகவினர் பெருமைப்பட தேவையில்லை - மா.சுப்பிரமணியன்

     


    கடந்த 2011-ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டதாகவும், தற்போது தங்களால் தான் கல்லூரிகள் அமைய உள்ளதாக அதிமுக மார்தட்டி கொள்வதில் எந்த நியாயமும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    பொங்கல் பண்டிகை என்பதால், இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது எனவும், அடுத்தவாரம் சனிக்கிழமை நடைபெறும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.



    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    சென்னை சைதாப்பேட்டை பழைய மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பதிவு மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். மாநகராட்சி அதிகாரிகள் உடன் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கடந்த ஆண்டுகளில் ஒரு குடும்பத்திற்கு 1 லட்சம் என்கிற அடிப்படையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் இருந்த நிலையில், தற்போது 5 லட்சம் வரை பயன்பெறலாம் என்கிற அடிப்படையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    மேலும் திமுக அரசு பொறுப்பு ஏற்றத்தில் இருந்து இதுவரை, 31,145 பேருக்கு, 382 கோடியே 5 லட்சம் ரூபாய் காப்பீடு திட்டத்தின் மூலம் பயனளிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் 1600 மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீடு மூலம் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் படிக்க : அதிமுக தான் ஸ்டிக்கர் ஒட்டி போலி ஆட்சி நடத்தியது. அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்!

    தற்போது சென்னையில் 21 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர், அவர்களுக்கு Virtual Monitor முறையில் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், கொரோனா பாதிப்பு உடையவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

    தொடர்ந்து பேசியபோது, எல்லா இடங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான வசதிகள் உள்ளது. 4 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், ஆனால் 40 ஆயிரம் பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர், எனவே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியானவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

    அதேபோல் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறார்கள் 73% பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 23 லட்சம் சிறார்களுக்கு தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு முதன்மை மாநிலம் என்கிற நிலையை எட்டியுள்ளது என்று  அமைச்சர் தெரிவித்தார், மெகா தடுப்பூசி முகாம் வரை காத்திருக்காமல் வார நாட்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும் என்று கூறினார்.

    இந்நிலையில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு 2011 பிப்ரவரியிலேயே  அரசாணை திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.  ஆனால் அதிமுகவினர்  தாங்கள் தான் கொண்டு வந்ததாக  கூறுகிறார்கள், உண்மையிலேயே அதிமுகவால் தான் இது தாமதமானது என்று அமைச்சர் கூறினார். அதுமட்டுமின்றி அதிமுகவால் தான் மருத்துவ கல்லூரி அமைய உள்ளது என்று மார்தட்டி கொள்வதில் நியாயம் இல்லை என்று மேலும் தெரிவித்தார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad