Header Ads

  • சற்று முன்

    பொங்கல் பரிசுத் தொகுப்பினை வீட்டிலிருந்து பை எடுத்து வந்து வாங்கிச்செல்லலாம்.. - தமிழக அரசு அறிவிப்பு..

     

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

     தமிழகத்தில்  பொங்கல் பண்டிகையை ஒட்டி 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு  வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி , வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்ட  பொங்கலுக்கான பொருட்களும், மஞ்சள்தூள், மிளகாய்தூள், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, சீரகம், புளி, மிளகு, ரவை, கோதுமை, உப்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகிறது. இத்துடன் அனைத்து பொருட்களையும்  வைக்கும் ஒரு துணிப்பையும், முழு நீள கரும்பும் கொடுக்கப்படுகிறது.  ஆனால் பல இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கும்போது துணிப்பை கொடுக்கப்படுவதில்லை என்றும், இதனால் பொருட்களை எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பவடுதாகவும்  புகார் எழுந்தது. 

    பொங்கல் பரிசு தொகுப்பு பட்டியல்

    இந்நிலையில் பொதுமக்கள் வீட்டிலிருந்தே பைகள் கொண்டு வந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்று தமிழக அரசு  தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை விடுத்துள்ள தமிழக அரசு, தமிழ்நாட்டில் 45.1 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கியிருப்பதாக  தெரிவித்துள்ளது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பொருட்கள் தயாராக இருப்பதாகவும், துணிப்பைகள் மட்டுமே சில இடங்களுக்கு இன்னும் வரவில்லை என கூறியுள்ளது. 

    இதையும் படியுங்கள் : ஊரடங்கின்போது திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..  

     

    பொங்கல் பரிசு தொகுப்பு பை

    கொரோனா ஊரங்கு  காரணமாக துணிப்பைகள் தைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பைகள் கிடைக்காத பகுதிகளில் பொதுமக்கள் வீட்டிலிருந்தே பைகள் எடுத்துவந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை வாங்கிச்செல்லல்லாம்  என்றும் தெரிவித்துள்ளது.  பைகள் பின்னர் தனியாக பொது விநியோக திட்ட பொருட்கள் வழங்கப்படும் போது வாங்கிக்கொள்ளலாம் என்றும்,  இதற்காக தனியே டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும்  இந்த  நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு  பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க வேண்டும் என்றும் பொது விநியோக திட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad