Header Ads

  • சற்று முன்

    துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..

     

    உயிரிழந்த சிறுவன் புகழேந்தி

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது குண்டு பாய்ந்து புகழேந்தி என்ற சிறுவன்  உயிரிழந்ததையடுத்து ரூ. 10  லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம், நார்த்தமலை சரகத்தில் அமைந்துள்ள துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தில், கடந்த 30-12-2021 அன்று துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்று வந்தது. இப்பயிற்சியின்போது நார்த்தமலைக்கு அருகில் உள்ள கொத்தமங்கலப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த புகழேந்தி   என்ற 11 வயது சிறுவன் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தபோது, அச்சிறுவனின் தலையில் இடதுபக்கத்தில் ஒரு குண்டு பாய்ந்துள்ளது. 

    துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்

    குண்டு பாய்ந்த அச்சிறுவன் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  சிறுவனின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு மருத்துவர்களால் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (03-01-2022) மாலை அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


    இதையும் படியுங்கள் ; தமிழகத்தில் இன்று ஒரே நாளில் சுமார் 2.34 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி - சுகாதாரத்துறை தகவல்..   

    இத்துயரச் சம்பவத்தை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகவும் வேதனையுற்று, உயிரிழந்த புகழேந்தியின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டதோடு, முதலமைச்சரின்  பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள். மேலும், இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறுத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில், இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad