’’தந்தையை கல்லால் அடித்துக் கொன்ற மகன்’’ பெரியபாளையம் அருகே நடந்த சோகம்..
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி புதிய தமிழ் காலனியை சேர்ந்தவர் வேணு வயது ( 60 ) இவர் கூலி வேலை பார்த்து வருகிறார் இவருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் ஒரு மகன் என நான்கு பிள்ளைகள் உள்ளனர். மனைவியை இழந்த வேணு மணிகண்டனுடன் வசித்து வந்துள்ளார்.
கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையானவர் மணிகண்டன். இவர் நேற்று ஆரணியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதால் காலையில் இருந்தே மதுகுடித்த வண்ணம் இருந்துள்ளார். மாலையில் வீடு திரும்பிய மணிகண்டன் தனது தந்தை வேணுவிடம் கஞ்சா வாங்கப் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
வேணு கஞ்சா அடிக்க கூடாது என்று அறிவுரை கூறி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அருகில் கிடந்த கல்லை எடுத்து வேணுவின் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் வேணு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் பணம் கேட்டு தர மறுத்த தனது தந்தையை தானே அடித்துக் கொன்று விட்டேன் என்று கதறி அழுது அருகில் இருந்த சுவற்றில் தலையை மோதிக்கொண்டார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மணிகண்டனை பிடித்து ஆரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பலியான கூலித்தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபர் மணிகண்டனுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது அவருக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் தர மறுத்த தந்தையை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments