ஆவடி மாநகராட்சி மேயர் வேட்பாளர் யார்? ரேசில் இரண்டு பேர்
சென்னை அருகே 15வது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில் அதன் முதல் மேயராக திமுக பிரமுகர் அமர உள்ளார்.
அவர் யார்?
சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சிக்கான தேர்தல் முடிந்து 22ந் தேதி 48 வார்டுகளுக்கும் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. அதில் திமுக 35, காங்கிரஸ் கட்சி 3, மதிமுக 3, சிபிஎம் 1 மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 என்று திமுக கூட்டணியில் 43 பேர் வெற்றியை சுவைத்தனர். இந்நிலையில் ஆவடி மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் 48 உறுப்பினர்களில் ஆண் பெண் இரு பாலர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட 8 வார்டுகளில் வெற்றிப் பெற்றவர்கள். அதனோடு பொது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இருவர் என்று ஆதிதிராவிடர்களில் 10 பேர் உறுப்பினராகி உள்ளனர்.
சென்னை மாநகராட்சியும், தாம்பரம் மாநகராட்சியும் ஆதிதிராவிடர் பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி, ஆதிதிராவிடர் (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில் வெற்றி பெற்ற ஆண் உறுப்பினர்கள் 9 வது வார்டு உறுப்பினர் உதயகுமார், 24 வது வார்டு பெருமாள், 21 வது வார்டு வீரபாண்டியன், 37 வது வார்டு ரமேஷ் ஆகிய நான்கு பேர் மேயர் களத்தில் இருக்கின்றனர். இந்த நான்கு பெயரில் 37 வது வார்டு உறுப்பினர் ரமேஷ் மட்டுமே B A . LLB படித்த பட்டதாரி என்ற கல்வி தகுதி கொண்டவர். அதேபோல் பெண் உறுப்பினர்கள் ஐந்து பேரில் ஒருவரை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. யாரை மேயராக்க வேண்டும் என்றாலும் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் முடிவே இறுதியானது என்று கூறுகின்றனர்.
இதனிடையே வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் 14 வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர் ராஜேஷ்குமார் வெற்றி சான்றிதழ் வாங்கிய கையோடு அமைச்சர் சா.மு.நாசரை சந்தித்து ஆசி பெற்று திமுகவில் ஐக்கியமானார். அதே கையோடு முதலமைச்சரையும் சந்தித்து விட்டார். இந்த நிகழ்வு ஆவடி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுக வில் இருந்து திமுகவில் இணைந்து கொண்ட டாக்டர் ராஜேஷ் குமார் கூட மேயராக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் பேசி வருகிறார்கள். இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது வேறு கட்சியில் இருந்து வந்தவருக்கு மேயர் பதவியை கொடுக்க மாட்டார்கள். அப்படி கொடுத்தால் ஆவடியில் திமுகவின் நிலை பரிதாபமாக மாறிவிடும் என்றார். திமுகவிலேயே அதிக உறுப்பினர்கள் இருக்கும்போது வேறு கட்சியில் இருந்து வந்தவருக்கு வாய்ப்பு தற்போது கொடுக்க மாட்டார்கள் என்று உறுதியாக கூறினார். மேலும் அமைச்சருக்கு மிகவும் விசுவாசமாக இருப்பவர் வீரபாண்டியன். அவருதான் மேயருக்கான வேட்பாளர். ஆனால் அவருக்கு கல்வி தகுதி பெரிதாக எதுவும் இல்லை. அந்த ஒரு குறைதான் என்று அந்த நிர்வாகி குறிப்பிட்டார்.
அதேபோல் மேலும் சிலரிடம் பேசும்போது 9 வது வார்டில் வெற்றி பெற்ற உதயகுமார் தான் மேயராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏன் என்றால் அவர் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் போது உதயகுமாரிடம் செலவுக்கு சுத்தமாக பணம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு வேட்பாளரை அமைச்சரும் அவருடைய மகனும் நேரடியாக கவனித்து அந்த வார்டை வெற்றி பெற வைத்தார்கள். அதனால் உதயகுமார் தான் மேயராக வருவார் என்று அழுத்தமாக தெரிவித்தார்.
அதேபோல் துணை மேயர் பதவிக்கு கடும் போட்டி இருந்தாலும் இரண்டு பேர் மட்டுமே பேசும் நபர்களாக இருக்கிறார்கள். ஒருவர் அமைச்சரின் மகனும் 4 வது வார்டு உறுப்பினர் ஆசிம் ராஜா, மற்றொருவர் முன்னாள் நகர செயலாளரும் தற்போதைய பகுதி செயலாளருமான ராஜேந்திரன் என்பவரும். இதில் ஒருவருக்கு துணை மேயர் பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆக.. மேயர் பதவி பேச்சு பரபரப்பாக பேசப்படுகிறது.
No comments