வேலை வாங்கித் தருவதாக மோசடி; பெண் உட்பட 4 பேர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாயை மோசடி செய்த போலி பள்ளி கல்வித்துறை பெண் அதிகாரி உட்பட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் பள்ளி கல்வித்துறை உட்பட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்வதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் குவிந்தன.
இந்நிலையில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த அமுதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சென்னை, நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த ரேணுகா, 48 என்பவர் பள்ளி கல்வித்துறை அதிகாரி எனக்கூறிக்கொண்டு 3 கோடி ரூபாய் வரை பலரிடம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து. அவரது போலி அடையாள அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவரது கூட்டாளிகளான சைதாப்பேட்டையைச் சேர்ந்த காந்தி, 54, நெற்குன்றத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், 32, தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 33 ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இவர்களால் 100க்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் ஏமாற்றப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
No comments