Header Ads


 • சமத்துவம் - அம்பேத்கரின் கனவும்.. மு.க.ஸ்டாலினின் இலக்கும்...


     சமத்துவம் என்றால் என்ன? அது கொள்கை சார்ந்ததா?அல்லது கற்பனையா? சமத்துவம் என்பது சாத்தியமா? அப்படி சாத்தியம் என்றால் இதுவரை சாத்தியப்படாததற்கு காரணமாக இருந்து வருவது எது? போன்ற பல்வேறு கேள்விகளைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான சமத்துவத்தை கண்டுபிடிக்க முடியும்.

  சமத்துவம் என்பது அனைத்து மனிதர்களையும் மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்பதுதான். இதில் நிறைய முரண்பாடுகள் இருக்கலாம், ஆனாலும் உன்னைப் போன்று ஒரு தாயின் வயிற்றில் பிறந்த மனிதரை உனக்கு சமமாக மதித்து நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது? அதில் என்ன பிரச்சனை இருக்கிறது? இதனை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு சரியென்றே தோன்றும். ஆனால் சமத்துவத்திற்கு எதிராக பேசுபவர்கள் அறிவு, திறமையை அளவீடாக வைத்து மதிப்பீடு செய்கின்றார்கள்.
  நானும் அவரும் சமமானவரா?   என்னோடு அவரை எப்படி சமமாக ஒப்பீடு செய்ய முடியும்? என் திறமை வேறானது, அவருடைய திறமை வேறானது. என் பண்பாடு, என் கலாச்சாரம் அவருடைய பழக்க வழக்கத்திற்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. அப்படி இருக்கும் போது சமத்துவம் என்ற பேசுவது சரியில்லை என்று பேசுபவர்களின் கருத்திலும் நியாயம் இருக்கிறது.  இதற்கு மனிதர்களை மூன்று வகையாக பிரித்து அதிலிருந்து ஆய்வு செய்வோம்.

  1 ஒருவர் தான் பிறந்த தாய், தந்தையாரின் உடல் ரீதியான பரம்பரை தன்மை

  2 அவர் வளரும் சமூக சூழ்நிலை, ( பெற்றோரின் கவனிப்பு, கல்வி, விஞ்ஞானம்,திறமை உள்ளிட்ட அம்சங்களில் மேம்பட்ட சூழ்நிலை)

  3 அவர் வளரும் போது  அந்த மனிதரின் சொந்த முயற்சி.

  இந்த மூன்று அம்சங்களையும் வைத்து மதீப்பீடு செய்தோம் என்றால் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் இல்லை என்று எளிதாக சொல்லிவிட முடியும். ஆனால் கல்வி, வேலை, திறமையின் அடிப்படையில் தான் சமத்துவத்தை பற்றி பேச வேண்டும் என்றால் ஒருவரையும் சமப்படுத்தி மரியாதை கொடுத்து பேசமுடியாது. ஒருவரிடம் கல்வி, உயர்ந்த வேலை இல்லை என்பதற்காக  அந்த மனிதரை நாம் சமமாக நடத்தக் கூடாதா? ஒருவரின் முயற்சியினால், வேலையின் தன்மையினால் சமம் இல்லாமல் இருக்கலாம். உத்தியோகத் தன்மையில் ஒருவர் மேலாளராகவும் இன்னொருவர் கடைநிலை ஊழியராகவும் இருக்கலாம். அங்கே சமத்துவத்தை பற்றி பேசமுடியாது. அதே மேலாளர் அலுவலகத்தை தாண்டி அந்த கடைநிலை ஊழியரை எப்படி நடத்துகிறார்? சாதாரண ஊழியர் என்பதனாலேயே அவரை மரியாதை குறைவாகத்தான் நடத்த வேண்டுமா?  மதிப்பு கொடுப்பதற்கும், மரியாதை கொடுப்பதற்கும் ஏதோ ஒரு தகுதியை காரணம் கட்டி அந்த மனிதரை ஒதுக்கி வைப்பதில் எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

  கடந்த 17-03-2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காரியத்தை செய்தார்.

  ஆவடியில் உள்ள நரிக்குறவர் மக்களிடம் காணொளி வாயிலாக முதலமைச்சர் உரையாடினார். அப்பொழுது அவர் உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தருகிறேன் என்று கூறியதோடு, அதனை நிறைவேற்றி தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பித்தார். பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரும் அதிகாரிகளும் துரிதமாக செயல்பட்டு அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார்கள்.

  காணொளி வாயிலாக அந்த மக்களிடம் முதலமைச்சர் பேசிய அந்த உரையாடலில் மிக முக்கியமானது, அய்யா, முதல்வர் அய்யா, நாங்கள் வாழும் வாழ்க்கை முறையை நீங்கள் நேரில் வந்து பார்க்க வேண்டும். எங்கள் கஷ்டங்களை நேரில் பார்த்து இந்த சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

  அதற்கு முதலமைச்சர்  பேசும்போது " நான் நேரில் உங்கள் வீட்டிற்கு வந்தால் சாப்பாடு கொடுப்பீர்களா ? என்றார். அந்த மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கிப் போனார்கள்.

  முதலமைச்சரின் இந்த பதில் கடைசி மனிதனிர்களுக்கும் துணையாய் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியது.

  அதேபோல் ஒரு நரிக்குறவர் பெண் கோயில் சமபந்தியில் அமர்ந்து சாப்பிட முற்படும்போது அந்த பெண்ணை பந்தியில் இருந்து எழுப்பி  விட்டதாக சமூக வலைதளங்களில் பரவியது. உடனடியாக செயலில் ஈடுபட்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் அடுத்த நாள் அந்த பெண்ணோடு அமர்ந்து அதே கோயிலில் உணவருந்தினார்.

  கடைக்கோடியில் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கும் இந்த அரசு ஆதரவு கரம் நீட்டும் என்ற எண்ணத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியது.  நரிக்குறவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மட்டும் தோராயமாக 10 லட்சத்திற்கு குறைவில்லாமல் இருக்கும் என்று நினைக்கிறேன். அதேபோல் இருளர்களும் சுமார் 50 லட்சத்துக்கு குறைவில்லாமல் இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் நம்மோடு வாழ்கிற ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அறியாமையில் வைத்திருக்கிறோம் என்கிற உண்மை வலிக்கவே செய்கிறது. இந்த பூர்வகுடி மக்களுக்கு கல்வி கொடுக்காமல், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் நாடோடிகளாகவும், பிச்சைகாரர்களாகவும் இதுநாள் வரை வைத்திருப்பதற்கு வெட்கப்பட வேண்டும்.

  நரிக்குறவர்கள், இருளர்கள் பிறவிலேயே மூடர்கள், அசுத்தமானவர்கள் என்பதே அவர்களின் தற்போதைய நிலைக்கு காரணம் என்று நியாயம் கற்பிக்கலாம். இந்த மக்களை நாகரிகம் உள்ளவர்களாகவும், அவர்களுக்கு தேவையான கல்வியை கொடுத்து நல்ல குடிமக்களாக மாற்றாமல் இதுநாள்வரை அலட்சியம் காட்டி வந்ததற்கு அரசை மட்டுமே குற்றம்சாட்ட முடியாது. இங்கே ஆழமாக பதிந்துள்ள சாதிய கட்டமைப்பே காரணம். கிரிஸ்த்துவ மிஷினரிகள் தானாக சென்று அந்த மக்களுக்கு கல்வி உதவிகளை செய்து தருவதை போல் இந்து மதத்தை சேர்ந்த ஒரு அமைப்பும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. இந்துக்கள் வரமாட்டார்கள் என்பதுதான் என் கருத்து. நரிக்குறவர்களை நாகரிகம் உள்ள மனிதர்களாக மாற்ற வேண்டும் என்றால் அவர்களோடு பழக வேண்டும், அவர்களில் ஒருவராக வாழவேண்டும், தோழமை உறவை வளர்க்க வேண்டும். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அவர்களை நேசிக்க வேண்டும்.   இதனை இந்து மதம் அமைப்புகள் செய்யாது என்பதே என் தாழ்மையான கருத்து. இவ்வளவு நாகரிகம் வளர்ச்சி அடைந்த நாட்டில் இன்றுவரை இந்துவாக வாழ்ந்து வரும் ஒரு குழுவினர் நாகரிகமற்றவர்களாகவே நீடிப்பதை கொஞ்சமும் வேதனைப்படாமல், மன உருத்தல் இல்லாமல் இந்து மதம் வேடிக்கை பார்க்கிறது என்றால் அதற்கு இந்து மதத்தில் உள்ள சாதிய கட்டமைப்பும், அதற்குள் இருக்கும் அரசியல் தான் காரணம். இந்த மக்கள் இப்படியே நாகரிகமற்றவர்களாக நீடித்தால் இந்து மதத்திற்கோ இந்துக்களுக்கோ எவ்வித இடைஞ்சலும் இருக்காது. ஆனால் இந்து மதம் அல்லாதவர்கள் அந்த மக்களை மீட்டு திருத்தி தம் மதத்தில் சேர்த்துக் கொண்டால்  இந்துக்களின் எதிராளிகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும். பொதுவாகவே நாகரிகமற்ற மக்களை திருத்தி நாகரிகமுள்ளவர்களாக மாற்றுவதற்கு இந்து மதம் முயற்சிப்பது இல்லை. அது அவர்களின் நோக்கமும் அல்ல. இந்து மதத்தின் பிடியில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை மேல் சாதியினர் கலாச்சார நிலையில் உயர்வடைவதை விரும்பமாட்டார்கள் அல்லது திட்டமிட்டு தடுத்துள்ளனர்.

  இப்படி ஒடுக்கப்பட்ட, இந்த சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கின்றார் என்பது மிகப்பெரிய சமூக புரட்சி என்றே கூற வேண்டும்.

  பிறப்பின் அடிப்படையிலும், வளந்த சூழ்நிலையின் அடிப்படையிலும் ஒரு குழுவினர் மற்றவரோடு சமநிலைக்கு வரமுடியாமல் இருக்கிறார்கள். அதனாலையே அந்த மக்களை சமமில்லாமல் நடத்துவது எவ்விதத்திலும் நியாயம் இல்லை. ஒருபகுதியில் அறிவாளிகளாகவும், வசதி வாய்ப்பு பெற்றவர்களாகவும் வாழும் அதேசமுதாயத்தில் இன்னொரு பக்கம் கல்வி மறுக்கப்பட்டு, வேலை வாய்ப்பு இல்லாமல் கூலியாகவும், பிச்சைக் காரர்களாகவும், சமுதாயத்தில் வாழ முடியாதவர்களாகவும் பெருங்குழுவினரை வைத்திருக்கிறோம்.
  அந்த மக்களுக்கு கல்வியை கொடுத்து ஊக்குவித்து சமநிலைக்கு கொண்டுவர வேண்டும். இதுதான் ஆட்சியாளர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமானதாக இருக்க வேண்டும்.

  சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரிடமிருந்தும் மிக உயர்ந்த பலனை பெறுவது சமூகத்திற்கும் அரசுக்கும் நல்லது என்றால், துவக்கத்திலேயே அனைவரையும் சமமாக இருக்க செய்வது, நடத்துவது மிக முக்கியம். அப்பொழுதான் அந்த சமூகத்திற்கு உயர்ந்த பலனை பெறமுடியும்.

  ஏழரை கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு மாநில முதலமைச்சருக்கு எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய கடமை இருக்கிறது. ஒவ்வொருவரின் தேவையை கேட்பதற்கு, அறிந்து கொள்வதற்கு அவருக்கு நேரமோ, அதற்கான விபரங்கள் பற்றிய அறிவோ இருக்க முடியாது. ஆனால் எல்லோருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். அதற்கு ஒரே வழிமுறை அனைத்து தரப்பு மக்களையும் சமமாக மதிக்க வேண்டும். அரசியல் என்பதூ நடைமுறை திட்டங்களை செயல்படுத்த கூடியது. அங்கே சமத்துவம் மட்டுமே சிறந்தது.

  ஜனநாயகத்தின் மறுபெயர் தான் சமத்துவம். ஜனநாயகம் என்பது வெறும் ஆட்சி முறை மட்டும் அல்ல. முதன்மையாக அனைத்து தரப்பினரையும் இணைத்து செல்கின்ற கூட்டு வாழ்க்கை முறை. ஒவ்வொரு மனிதரும் மற்ற மனிதர்கள் மீது மதிப்பும், மரியாதையும் கொடுத்து வாழ்வதுதான் ஜனநாயகம். அதைதான் மு.க. ஸ்டாலின் செய்து வருகின்றார். 

  என்.கே.மூர்த்தி..


  No comments

  Post Top Ad

  Post Bottom Ad