ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை… வழக்கு கடந்துவந்த பாதை!
1991-ம் ஆண்டு, மே மாதம் 21-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்தார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. அப்போது அவர்மீது மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் முக்கியக் குற்றவாளிகளாகக் கைதுசெய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்துவந்தனர்.
பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ஏழு பேரின் விடுதலை ஒரே ஆண்டில் உறுதி ஆகியுள்ளது. இந்த வழக்கு கடந்துவந்த பாதை குறித்துப் பார்க்கலாம்.
ராஜீவ் காந்தி;.
ஜூன் 21, 1991 - குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் சிவராசன், தனு ஆகியோர். அவர்கள் இருவரும் அணிந்திருந்த வெடிகுண்டு பெல்ட்டின் செயல்பாட்டுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக 19 வயதான பேரறிவாளன் மத்திய புலனாய்வுத்துறையால் கைதுசெய்யப்பட்டார்.
ஜனவரி 28, 1998 - வெடிகுண்டுச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் ஆகியோருடன் 26 பேருக்கு சென்னை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
மே 1,1 1999 - வழக்கின் மேல்முறையீட்டில், 19 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களுள் பேரறிவாளரன், நளினி, சாந்தன், முருகன் ஆகியோருக்குத் தூக்கு தண்டனையும் ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் உறுதிசெய்யப்பட்டது.
8 அக்டோபர் 1999 - உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் ஆகிய நால்வரும் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடியானது.
7 பேர் விடுதலை விவகாரம்;.
அக்டோபர் 27தேதி, 1999 – பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் ஆகிய நால்வரும் ஆளுநருக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது.
ஏப்ரல் 19, 2000 - நளினியின் தூக்குத் தண்டனையைக் குறைக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை தமிழக ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இவற்றுடன், ராஜீவ் காந்தியின் மனைவியும் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி, அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனையைக் குறைக்கும்படி குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை வைத்தார்.
ஆகஸ்ட் 30, 2011- முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இவர்களின் தூக்குத் தண்டனையும் ரத்துசெய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தார்.
பிப்ரவரி 18, 2014 - பேரறிவாளன் உள்ளிட்ட நால்வர் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அது அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே ஏழு பேரை விடுதலை செய்ய ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை முடிவுசெய்தது.
கருணாநிதி, சோனியா;.
பிப்ரவரி 20, 2014 - தமிழக அமைச்சரவை முடிவுசெய்ததை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனடிப்படையில், அவர்களின் விடுதலையை உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது.
டிசம்பர் 2015 - இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
ஆகஸ்ட் 25 2017 - உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தந்தையைச் சந்திக்க பேரறிவாளனுக்கு முதன்முறையாக தமிழக அரசு பரோல் வழங்கியது.
செப்டம்பர் 6, 2018 - தன்னை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த பேரறிவாளன் வழக்கில் முடிவெடுக்க ஆளுநருக்கு உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
பேரறிவாளன்;.
செப்டம்பர் 9, 2018 - இந்த வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் விடுதலை செய்ய எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு ஆளுநருக்கு மீண்டும் பரிந்துரை செய்தது.
ஜனவரி 23, 2021 - ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை முடிவு குறித்து மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மே 19, 2021- பேரறிவாளன் பரோலில் வெளியே வந்தார். அதன் பிறகு அவரது பரோல் தமிழக அரசால் நீட்டிக்கப்பட்டது
மே 18, 2022 - பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த வழக்கில் விசாரணை நடைபெற்றுவந்தது . இந்த நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்
பேரறிவாளன் விடுதலை;.
ஆளுநர் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கக் காலம் தாழ்த்திவந்ததைத் தொடர்ந்து , எஞ்சிய ஆறு பேரும் தங்களை விடுதலையை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பி.ஆர்.கபாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இதில் நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.
No comments