தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் குறிப்பிட்ட சில பிற மாநிலங்களில் கடந்த வருடம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு நாள் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என அரசியல் கட்சியாக மாறியுள்ள நிலையில், கடந்த வருடம் செய்ததை போலவே இந்த வருடமும் அன்னதானம் வழங்க வேண்டும் என கழக நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியிருந்தார். குறிப்பாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம் ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஒரு வேளை உணவிற்கு கூட கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு இந்த ஒரு வேளை மதிய உணவு வழங்குவதற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணி முதல் தொடங்கும் இந்த ஒரு நாள் மதிய உணவு சேவை மூலமாக அசைவ உணவாக பிரியாணி மற்றும் சைவத்தில் வடை,பாயாசத்துடன் கூடிய சமபந்தி விருந்து போன்றவை வழங்க தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் அரசியல் கட்சியாக மாறிய பின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொது நிகழ்ச்சியாகவும் இந்த நிகழ்ச்சிப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.