நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள நரசிங்கபாளையத்தில் வாக்குச்சாவடி அருகே பாஜக மற்றும் விசிகவினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் மண்டை உடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 தொடங்கிய வாக்குப்பதிவானது இன்று மாலை 6 மணியளவில் முடிவடைகிறது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உட்பட பல்வேறு வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் நரசிங்கப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியானது ஏற்கனவே பதற்றமான வாக்குச்சாவடி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இந்நிலையில் அதே மையத்தில் பாஜக மற்றும் விசிகவினரிடையே வாக்குப்பதிவு மையத்திற்குள் பிரசாரம் செய்ததாக இரு தரப்பினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றவே இரு தரப்பினருக்கும் கைகலப்பானது. இந்த கைகலப்பில் இருவர் மண்டை உடைந்து இரத்தம் கொட்டியுள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு கட்சியினரும் மாறி மாறி மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.