தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மானங்கோரை பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 25 பேர் படுகாயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து புறப்பட்ட அரசு பேருந்து 40 பயணிகளுடன் தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தானது அய்யம்பேட்டை அருகே மானங்கோரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தெறிக்கெட்டு ஓடியது. இதனையடுத்து சாலையோரம் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த லட்சுமி என்பவர் (வயது 50) பேருந்தின் இடிபாட்டிற்குள் சிக்கியதில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 25 பேரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.