பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இன்று அதிகாலை இறங்கினார்.
உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா, கடந்த ஏப்ரல் 12- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று முன் தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நேற்று அதிகாலையில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் மீனாட்சியம்மன்- சுந்தரரேஸ்வரர் சமேதரராக எழுந்தருளினர். தேர்களுக்கு முன் அலங்கரிக்கப்பட்ட யானை செல்ல, இதைத் தொடர்ந்து, விநாயகர், முருகன், நாயன்மார்கள் எடுத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் என்றழைக்கப்படும் கள்ளழகர் இன்று வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. இன்று அதிகாலை 5.50 மணியளவில் கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் கோஷம் விண்ணை பிளக்க தங்கக்குதிரையில் பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். கள்ளழகர் ஆற்றில் இறங்கியதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அழகர் மீது தண்ணீர் பாய்ச்சி அடித்து தங்களது மகிழ்ச்சியில் வெளிப்படுத்தினர். இவ்விழாவில் பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் பக்தர்களை கண்காணிக்க சுமார் 4000த்திற்கும் மேற்பட்ட போலீசார்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.