நாடாளுமன்ற தேர்தலையொட்டி மதுரை அருகே 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்ததால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 தொடங்கிய வாக்குப்பதிவானது இன்று மாலை 6 மணியளவில் முடிவடைகிறது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உட்பட பல்வேறு வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். இதில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் பேர் ஆகும். மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் கடைசி வாக்காளர் வரை அனைவரும் வாக்களிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை அருகே 5 கிராம மக்கள் இன்று நடைபெற்று வரும் மக்களவை தேர்தலை வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளதால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதில் கே.சென்னாம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால் கேரளாவைச் சேர்ந்த தனியார் கெமிக்கல் நிறுவனம் இறைச்சி கழிவுகளை சுத்திகரிப்பதால் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சீல் வைக்கவில்லை என்றால் ஓட்டு போடமாட்டோம் என பொதுமக்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை எஸ்.பி, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் 5 கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.